(Source: ECI/ABP News/ABP Majha)
10th Original Certificate: மாணவர்களே தயாரா? இன்று முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்: பெறுவது எப்படி?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) முதல் பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) முதல் பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதே நேரத்தில், தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்வு
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. இந்தத் தேர்வு, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9.14 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதற்கிடையே 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியானது. இதனால்தான் செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதேபோல ஏப்ரல் 25 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணி மே 3ஆம் தேதி வரை 7 வேலை நாட்களுக்கு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொதுத் தேர்வு முடிவுகளை, மே 19ஆம் தேதி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்
தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.64% தேர்ச்சி பெற்றனர்.
பொதுத் தேர்வை 4,59,303 மாணவர்கள். 4,55, 017 மாணவிகள் என மொத்தம் 9,14, 320 பேர் எழுதி இருந்தனர். இதில் 8,35, 614 பேர் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 4,04, 904 பேரும், மாணவிகள் 4,30,710 பேரும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை விட மாணவிகள் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக இருந்தது.
இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) முதல் பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிட்டது. காலை 10 மணி முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை வழங்க உள்ளனர்.
தனித் தேர்வர்களுக்கு எப்படி?
தனித் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Result Schedule: டிசம்பரில் குரூப் 1 தேர்வு முடிவுகள்; 11 வகையான தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!