சென்னையில் இரு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி கொடுக்கும் போது இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்
பெண்ணுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கைது.

ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பாலியல் சீண்டல்
சென்னை புனித தோமையர்மலை காவல் மாவட்ட நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சியில் சேர்ந்த போது , பயிற்சி பள்ளி உரிமையாளரான கோபால கிருஷ்ணன் ( வயது 60 ) என்பவர் அப்பெண்ணிற்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிப்பதற்காக , வேளச்சேரி இரயில் நிலைய சாலை அருகே அழைத்து சென்று பயிற்சி அளிப்பது போல , அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பயிற்சி பள்ளி உரிமையாளர் கைது
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். W-32 மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் , தீவிர விசாரணை செய்ததில், புகார் தாரர் குறிப்பிட்டிருந்தது உண்மையென தெரியவந்ததின் பேரில், எதிரி கோபாலகிருஷ்ணன் ( வயது 60 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கணவர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய வழக்கில் மனைவி கைது. கணவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், கொலை வழக்காக மாற்றம்
சென்னை கொளத்தூர் லட்சுமிபுரத்தில் காதர் பாஷா ( வயது 42 ) என்பவர் மனைவி நிலவர் நிஷா மற்றும் மகளுடன் வசித்து வந்த போது காதர் பாஷா அடிக்கடி குடித்துவிட்டு மனைவி நிலவர் நிஷாவுடன் தகராறு செய்து வந்த நிலையில் , கடந்த 09.08.2025 அன்று இரவு காதர் பாஷா மதுபோதையில் நிலவர்நிஷாவிடம் தகராறு செய்து தாக்கி விட்டு தூங்க சென்ற நிலையில் , அதிகாலை (10.08.2025) ஆத்திரத்தில் இருந்த நிலவர் நிஷா வாலியில் எண்ணையை கொதிக்க வைத்து, தூங்கி கொண்டிருந்த கணவர் காதர் பாஷாவின் மேல் கொதிக்கும் எண்ணையை ஊற்றியுள்ளார்.
இதில் தீக்காயமடைந்த காதர் பாஷா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இச்சம்பவம் குறித்து M-3 புழல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து , நிலவர் நிஷா ( வயது 48 ) என்பவரை 10.08.2025 அன்று கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காதர் பாஷா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்து விட்டதாக மருத்துவமனையில் இருந்த தகவல் கிடைத்ததின்பேரில் , காவல் குழுவினர் மருத்துவமனை சென்று விசாரணை செய்து , காதர் பாஷா இறந்தது உறுதி செய்யப்பட்டு, இறப்பு அறிக்கை பெற்று , இவ்வழக்கின் சட்டப்பிரிவு கொலை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.





















