(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: அதிர்ச்சி.. கணவனின் குடிப்பழக்கத்தால் சோகம்... மனைவி எடுத்த விபரீத முடிவு!
தாம்பரம் பகுதியில் கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னையை அடுத்த தாம்பரம், இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த எழில்குமார் (வயது 46) இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். எழில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில் அவரது மனைவி விஜயகுமாரிக்கும் (வயது 41) அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.25) வழக்கம் போல எழில் குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில், இருவருக்குமிடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது.
தொடர்ந்து படுக்கை அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்ட விஜயகுமாரி நீண்ட நேரம் ஆகியும் வெளியேவராமல் இருந்துள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த எழில்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது அறையில் இருந்த மின்விசிறியில் தன் புடவையால் தூக்கிட்டு விஜயகுமாரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் விஜயகுமாரியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல!
கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை தற்காலிகமாக்குவதும் நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தை பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறியத் தொடங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)