கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
கொலையை மறைக்கும் நோக்கிலும், விபத்தில் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் வகையிலும் விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையோரமாக உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
விழுப்புரம்: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் தேனி வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என 3 பேரை பிடித்து விழுப்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர். அந்த வாலிபரின் சட்டைப்பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தில் தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் அருகே உள்ள கொம்பை கிராமம் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் அரவிந்த் (வயது 25) என்று இருந்தது.
அடித்துக்கொலை
மேலும் அவரை யாரோ அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை விழுப்புரம் புறவழிச்சாலையில் வீசிவிட்டு சென்றிருப்பதை உறுதி செய்த போலீசார், இதுகுறித்து தேனி கொம்பையில் உள்ள அவரது குடும்பத்தினரை தொடர்புகொண்டு பேசினர். உடனே அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் விரைந்தனர். அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைத்திருந்த அரவிந்தின் உடலை பார்த்து அது தங்கள் மகன் தான் என்பதை போலீசாருக்கு உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அரவிந்தை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதோடு, சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு செய்தனர்.
3 பேரை பிடித்து விசாரணை
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் காலை மடக்கிப்பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
கள்ளத்தொடர்பு விவகாரம்
கொலை செய்யப்பட்ட அரவிந்த், சென்னையில் உள்ள அப்பளம் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், அங்கு வசித்து வரும் விழுப்புரம் அருகே வெங்கந்தூரை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த அவர், அரவிந்தை பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் அரவிந்த் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அரவிந்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்து தனது உறவினர் மற்றும் நண்பர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். சம்பவத்தன்று அரவிந்தை அந்த நபர் தொடர்பு கொண்டு புதியதாக கார் வாங்கலாம் என்று கூறி அதற்காக மறைமலைநகர் பகுதிக்கு நேரில் வரும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அரவிந்தும் அங்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை 3 பேரும் சேர்ந்து மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயங்கிய நிலையில் இருந்த அரவிந்தை, அவர்கள் 3 பேரும் ஒரு காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு புறப்பட்டனர். விக்கிரவாண்டி அருகே வரும் போது அரவிந்த் இறந்துள்ளார். உடனே கொலையை மறைக்கும் நோக்கிலும், விபத்தில் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் வகையிலும் விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையோரமாக அரவிந்தின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.