Vellore Incident: வேலூரில் அரங்கேறிய மற்றொரு டெல்லி நிர்பயா சம்பவம்...! அன்றும் இன்றும் நடந்தது என்ன?
வேலூரில் இளம்பெண்ணிற்கு நடைபெற்ற பாலியல் பலாத்கார நிகழ்வு டெல்லியைப் போலவே வேலூரிலும் பலாத்கார கொடூரம் அரங்கேறியுள்ளதா? என்று தமிழக மக்களை தலைகுனிய வைத்துள்ளது.
வேலூரில் நண்பருடன் படம் பார்த்துவிட்டுச் சென்ற இளம்பெண்ணை சிறுவர்கள் உள்பட 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம், டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ மாணவி நிர்பயாவிற்கு நடைபெற்ற கொடூரத்தை நினைவூட்டியுள்ளது.
டெல்லியில் பேருந்து, வேலூரில் ஆட்டோ :
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி மருத்துவ மாணவி நிர்பயா நண்பருடன் இரவில் தனியார் பேருந்தில் தனது நண்பருடன் பயணம் செய்தார்.
வேலூர் காட்பாடி அருகே திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16-ந் தேதி படம் பார்த்துவிட்டு நண்பருடன் இளம்பெண் திரும்பினார். அப்போது, ஆட்டோவிற்கு காத்திருந்த அவர்களிடம் ஷேர் ஆட்டோ என்று கூறி ஒரு ஆட்டோவில் 5 பேர் வந்தனர்.
கூட்டு பலாத்காரம் :
டெல்லியில் நிர்பயா பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் உள்பட 6 பேர் கொண்ட கும்பல் அவரது நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர், ஓடும் பேருந்தில் இருந்து நிர்பயாவை தூக்கி வீசினர்.
வேலூர் விவகாரத்தில் ஆட்டோவை வேறு பாதையில் ஓட்டிய ஆட்டோ டிரைவர் பாலாற்றின் கரைக்கு அவர்களை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர்தான் இவர்கள் அனைவரும் ஒரே கும்பல் என்று தெரியவந்துள்ளது. அந்த கும்பல் அந்த இளம்பெண்ணின் நண்பரை தாக்கியதுடன், அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டை பறித்து பணத்தை ஏ.டி.எம். இயந்திரத்தில் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கைது :
டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் பேருந்து ஓட்டுனர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர். அக்ஷய்குமார் சிங் என்ற குற்றவாளி அவுரங்காபாத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போதையில் சண்டையிட்ட 2 வாலிபர்களை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இந்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ஆட்டோ ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
நிர்பயா வழக்கு :
டெல்லி நிர்பயா கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கு நாடு முழுவதும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. 2012ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி சப்தர்ஜிங் மருத்துவமனையில் மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயா வாக்குமூலம் அளித்தார். அதே ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி நிர்பயா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நிர்பயா மரணம் :
2012ம் ஆண்டு டிசம்பர் 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி நிர்பயா அதிகாலை 2.15 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
நிர்பயா வழக்கு விசாரணை :
- 2013 ஜன. 3 : பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல், ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் 5 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு.
- மைனர் குற்றவாளி மீதான வழக்கு மட்டம் சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
- 2013, ஜன. 17 : டெல்லி சாகேட் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
- 2013, மார்ச். 11 : முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை.
- 2013, ஆக. 31 : குற்றம் நிரூபிக்கப்பட்ட மைனர் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
- 2013, செப். 10 : குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
- 2013, செப். 13 : குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- 2014, மார்ச் 2 : குற்றவாளிகளில் இருவர் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
- 2014, ஜூலை 14 : குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை
- 2015, டிசம். 20 : மூன்று ஆண்டு சிறைத்தண்டனை முடிந்து, மைனர் குற்றவாளி விடுதலை
- 2017, மே 5 : டெல்லி உயர்நீதிமன்றம் நான்கு பேருக்கும் விதித்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
- 2017, நவ. 13 : உச்சநீதிமன்றத்தில் அக்ஷய்குமார் தவிர 3 பேர் மறுசீராய்வு மனு
- 2018, ஜூலை 9 : உச்சநீதிமன்றம் அவர்களின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது
- 2020, ஜன 7 : நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் திகார் ஜெயிலுக்கு நோட்டீஸ்
- 2020, மார்ச் 19 : நான்கு பேரையும் மறுநாள் காலை 5.30 மணிக்கு தூக்கிலிட உத்தரவு
- 2020, மார்ச் 20 : அதிகாலை 2.30 மணிக்கு அவர்கள் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
- 2020, மாரச் 20 : அதிகாலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.