Crime: 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சோஷியல் மீடியா நட்பால் கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி..
இளைஞர் தனக்கு பிறந்த நாள் என்றும் , நாளை தனது வீட்டில் பிறந்த நாள் பார்ட்டி இருக்கிறது வருமாறும் சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
சமூக வலைத்தளங்கள் மூலம் பழக்கமான நபரால் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஒருபக்கம் பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட்டாலும் அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் கூடுதல் கவலை அளிப்பதாக இருக்கிறது. குஜராத்தின் வதோதரா பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் முன்பின் தெரியாத இளைஞர் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலம் நண்பராகியிருக்கிறார். இருவரும் நண்பராக பழகி வந்த சூழலில் அந்த இளைஞர் தனக்கு பிறந்த நாள் என்றும் , நாளை தனது வீட்டில் பிறந்த நாள் பார்ட்டி இருக்கிறது வருமாறும் சிறுமிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி தனது அம்மாவின் மொபைலில் இருந்து அழைப்பு ஒன்றை செய்துவிட்டு , எப்போதும் போல தனது மாமாவுடன் டியூஷன் சென்றிருக்கிறார். மாமா தன்னை இறக்கிவிட்டு சென்றதும் , அந்த சிறுமி தனது சமூக வலைத்தள நண்பரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று , தனது தோழி என அறிமுகம் செய்திருக்கிறார். ஆனால் அந்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. உடனே மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்ற இளைஞர் அவரிடம் அத்துமீறி நடக்க துவங்கியதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் பயந்து போனவர் தான் வீட்டிற்கு போக வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார். உடனே சிறுமியை தாக்கிய இளைஞர் , கொலை செய்துவிடுவேன் என மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து உனது பெற்றோருக்கு தெரியப்படுத்தினால் நான் உன்னை கடத்தி சென்று கொலை செய்வேன் என மிரட்டியிருக்கிறார்.
இதற்கிடையில் வெகு நேரமாகியும் டியூஷனில் இருந்து சிறுமி வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தேட துவங்கியிருக்கின்றனர். பின்னர் அம்மாவின் மொபைலில் இருந்து அவர் அழைத்த எண்ணினை தொடர்புக்கொண்ட பொழுது , எதிர் முனையில் இருந்த நபர் சிறுமி விரைவில் வீட்டிற்கு வருவார் என தெரிவித்துள்ளார். சிறிது நேரம் கழித்து, பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு வந்தபோது, அவர் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை அழுதவாறு கூறியிருக்கிறார். அந்த நபர் தனக்கு சமூக வலைத்தளம் மூலம் நண்பரானர் என முழு விவரத்தையும் கூறவே, ஆத்திரமடைந்த தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கடத்தல் (363), தானாக முன்வந்து ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிகளால் காயப்படுத்துதல் (324), 16 வயதுக்குட்பட்ட மைனர் மீது கற்பழிப்பு உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது [376(3)] மிரட்டல் [506(2)] அத்துடன் பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு (POCSO) சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டம், 1989 ஆகியவற்றின் அடிப்படையில் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.