Crime: இப்படியா அடிப்பாங்க!? இரும்பு பைப்பால் மாணவனை தாக்கிய ஆசிரியர்!
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் புறநகர் பகுதியான யெலஹங்காவில் ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பெங்களூருவில் 10 ஆம் வகுப்பு மாணவனை இரும்பு பைப்பால் ஆசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆசிரியர்- மாணவர் இடையேயான உறவு எவ்வளவு உன்னதமானது, கற்றுக்கொடுக்கும் குரு, கற்றுக்கொள்ளும் சிஷ்யன் என அந்த பந்தந்தை எவ்வளவு விவரித்தாலும் வாழ்க்கையில் அத்தகைய நினைவுகள் மறக்க முடியாதது. ஆனால் சில இடங்களில் முரட்டுத்தனமான நடந்து கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்களால் ஒட்டுமொத்தமாக இவர்கள் என்றாலே இப்படித்தான் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனைத் தடுக்க அரசு எவ்வளவு விழிப்புணர்வு, நடவடிக்கைகள் எடுத்தாலும் ஆங்காங்கே குற்றங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் புறநகர் பகுதியான யெலஹங்காவில் ஆசிரியர் மாணவரை தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள டியூஷன் சென்டர் ஒன்றில் 35 வயது ஆசிரியர் விஜய்குமார் 10 ஆம் வகுப்பு மாணவனை இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியதாக கைது செய்யப்பட்டார். போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் விஜய்குமார் மாணவரை தாக்கியதில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்றதும் தனது அம்மாவிடம் மாணவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசிடம் புகாரளித்த மாணவரின் தாய், மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட காயம் குறித்து தெரிவிக்காமல் இரவு 8.30 மணி வரை டியூஷனிலேயே வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஜயகுமார் மீதுஐபிசி 324 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலீசார் தங்கள் சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர்.
ஆனால் மாணவரை தாக்கிய குற்றச்சாட்டை மறுத்துள்ள ஆசிரியர் விஜய்குமார், டியூஷன் முடிந்து சாயங்காலம் ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போக வேண்டும், கோச்சிங் சென்டருக்கு வெளியே நிற்கக் கூடாது என்று சொன்னேன். ஆனால் சிலர் அதனைக் கண்டுக் கொள்ளாமல் டியூஷன் மையத்திற்கு வெளியே நடமாடுவதைக் காண முடிந்தது. இங்கே என்ன செய்கிறீர்கள் என நான் கேட்டபோது ஆணவத்துடன் பதிலளித்தனர். அவர்களை மிரட்ட இரும்பு பைப்பை கையில் எடுத்தேன். ஆனால் நான் யாரையும் மிரட்டவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்