திரிபுரா: பேஸ்புக் பழக்கத்தில் ஏமாற்றி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. நடந்த என்ன?
புர்பா கோகுல்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், அது கூட்டு பாலியல் வன்கொடுமையில் சென்று முடிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேஸ்புக் காதல்
இச்சம்பவம் புதன்கிழமை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் நடந்துள்ளது மற்றும் முக்கிய குற்றவாளியான 21 வயதுடைய இளைஞர், அந்த பெண்ணுடன் பேஸ்புக்கில் நட்பாக பழகியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அதன் பின் இதுபோன்ற அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்ததாக போலீசார் குறி்ப்பிட்டுள்ளனர். மேலும் புர்பா கோகுல்பூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர்.
வற்புறுத்தி புகைப்படம்
"முக்கிய குற்றவாளி, அந்த பெண்ணை டெபானியா சுற்றுச்சூழல் பூங்காவில் வந்து சந்திக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். கட்டாயத்தின் பேரில் வந்து சந்தித்த பெண்ணை வற்புறுத்தி சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த பெண் அதனை மறுத்தாலும் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்ததால், தான் பிளாக்மெயில் செய்யப்படுவதை உணர்ந்த அந்த பெண், சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார், ஆனால் அவரால் தப்பிக்க முடியவில்லை" என்று உதய்பூரின் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் நிருபம் தத்தா பிடிஐயிடம் தெரிவித்தார்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
முக்கிய குற்றவாளி 17 வயது சிறுமியை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக நிருபம் தத்தா மேலும் கூறினார். அந்த இளைஞருடன் சேர்ந்து மற்ற இரண்டு நண்பர்களும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அன்று மாலை வரை சிறுமியின் மீதான சித்திரவதை தொடர்ந்துள்ளது. "வீடு திரும்பியபோது, மூன்று பேரும் ராஜர்பாக் பகுதியில், காரில் இருந்து பாதிக்கப்பட்டவரை தூக்கி எறிந்துவிட்டு வாகனத்தில் தப்பிச் சென்றனர்." என்று மாஜிஸ்திரேட் மேலும் தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆர்.கே.பூர் மகளிர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இந்த வழக்கிற்கான எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. சிறுமியும் முக்கிய குற்றவாளியும் கடந்த 6 மாதங்களாக ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருந்ததாகவும், அந்த இளைஞர் தனது உண்மையான அடையாளத்தை அந்த பெண்ணிடம் மறைத்ததாகவும் அவர் கூறினார். "இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது, தலைமறைவான இரு குற்றவாளிகளையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று தத்தா கூறினார். இந்த சம்பவத்திற்கு திரிபுரா மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்னாலி கோஸ்வாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சமூக ஊடக தளம் மூலம் மைனர் பெண்கள் பலர், சில இளைஞர்களின் பிடியில் சிக்குவதை நாங்கள் அவதானித்து வருகிறோம். ஆன்லைன் நட்பின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி செல்லும் சிறுமிகளுக்கு, சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.