Maamannan Audio Launch Vadivelu Speech: இனி அரசியலில் உதயநிதி ஹீரோ.. என்னை ரஹ்மான் பாடவைத்தார்... வடிவேலு அதிரடி..
”இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நான் இந்தப் படத்தில் பாடியுள்ளேன். நான் பாடவில்லை, ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்னைப் பாட வைத்திருக்கிறார்” என வடிவேலு மகிழ்ச்சியுடன் பேசினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வடிவேலு படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடிக்க, உதயநிதி ஸ்டாலின் , ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
திரளாக வந்த நட்சத்திரப் பட்டாளம்
இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், பா.ரஞ்சித், நடிகர் சிவகார்த்திகேயன், ஹெச்,வினோத், தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், ஏ,ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் தாணு, கே.ராஜன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, நடிகர் விஜயகுமார் என பெரும் திரளான நட்சத்திரப் பட்டாளமே கலந்துகொண்டுள்ளது.
இந்நிலையில் முன்னதாக இசை வெளியீட்டு விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு பேசியதாவது: “ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறீர்களே?” என்ற கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்தார் நடிகர் வடிவேலு. “எங்கே நேரு ஸ்டேடியத்திற்கா...? என்று கேட்டு புன்னகைத்தார்.
'மீம்களுடன் உங்களுடன் இருக்கிறேன்’
“நான் உங்க பாக்கெட்டில் உள்ள செல்போனில் இருக்கிறேன். எந்நேரமும் நீங்கள் என்னைப் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். அன்பு தம்பிகள் மீம் கிரியேட்டர்ஸ் உருவாக்கும் மீம்களால் உங்களோடு நான் எப்போதும் இருக்கிறேன்” என்று கூறினார்.
சிறந்த நட்சத்திரங்கள் எல்லாரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். உங்க வீட்டுப் பிள்ளை நான். எல்லாரும் இதில் நடித்திருக்கிறோம். நல்ல கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் நடித்ததற்கு பெருமையடைகிறேன். இது எல்லோர் வாழ்விலும் கனெட்க் ஆகும் கதையாக இருக்கும். அருமையான கதையை உதயநிதி சார் தேர்ந்தெடுத்துள்ளார்.
’ரஹ்மான் பாட வைத்தார்’
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நான் இந்தப் படத்தில் பாடியுள்ளேன். நான் பாடவில்லை, ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்னைப் பாட வைத்திருக்கிறார். மறைந்த என்னுடைய தாய், என் அம்மா என்னை அழகாக பாட தூண்டி, ஊக்கம் கொடுத்து, எனக்குத் துணையாய் இருந்து வெற்றியை கொடுத்திருக்கார். என் தாயை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்கிறேன். என் அம்மா என் மனதுக்குள் வாழ்கிறார்”
தேவர் மகன் Vs மாமன்னன்
தேவர் மகன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, “தேவர் மகனுக்கு பின் இது எனக்கு பெரிய படம், தேவர் மகன் அரசியல் படமல்ல, ஆனால் இது அரசியல் படம். கதையை முழுவதும் என்னால் சொல்ல முடியாது” என்றார்.
வில்லனாக நடிக்கிறார். துப்பாக்கியுடன் இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் எல்லாமே இருக்கும் குணச்சித்திரக் கதாபாத்திரம் இது. சுயமரியாதை கலந்த கதை இது” என்றார்.
அரசியலில் ஹீரோ
‘உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் இது’ என செய்தியாளர்கள் குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய நிலையில், “அப்படி சொல்ல முடியாது. இவ்வளவு நாள் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தார், இனி அரசியலில் ஹீரோவாகப் போகிறார். அரசியலில் நிலையாக அவருக்கு வேலை இருக்கு. மக்கள் பணியை தொடார்வதற்காக அதை செய்கிறார்” எனப் பேசிவிட்டு மைக்கை எடுத்துக் கொடுத்து விட்டு வடிவேலு சென்றார்.