திருவண்ணாமலை : வாட்ஸ் அப்பில் வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
திருவண்ணாமலையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப்பில் வந்த புகாரின் அடிப்படையில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் அலுவலகத்தில் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் என்ற பெயரில் காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 99885766166 என்ற எண்ணில் போன் செய்தோ அல்லது வாட்ஸ் அப் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 17.06.2021 - ம் தேதி முதல் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த எண்ணிற்கு தொலைபேசி மற்றும் வாடஸ்அப் வாயிலாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகின்றனர் .
இந்நிலையில் 23- ம் தேதி சிறப்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலம் திருவண்ணாமலை தாலுக்கா , மாயாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, விழுப்புரம் மாவட்டம் , செஞ்சி தாலுக்கா , கணக்கன்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் வரும் 28ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் அனுபபட்டு இருந்தது . தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்க, தனிப்படை குழுவை அனுப்பியதோடு சமூக நலத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை மற்றும் சமூக நலத்துறையினர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயங்குளம் கிராமத்திற்கு சென்று குழந்தை திருமணம் நடைபெற இருந்த 17 வயது சிறுமியை மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இதே போன்று தண்டராம்பட்டு அடுத்த சே. ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது வாய்ப்பிருக்கும் (ஞாயிற்றுக்கிழமை) தானிப்பாடியில் உள்ள ஒரு கோவில் திருமணம் நடைபெற இருப்பதாக தானிப்பாடி கிராம நிர்வாக அதிகாரி முத்துவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை இரவு சிறுமியின் வீட்டிற்கு தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சமூக நல அலுவலர் அம்சவல்லி, சைல்டு லைன் அதிகாரிகள் சென்று பெற்றோரிடம் குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் சிறுமியை மீட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் அடிக்கடி இதுபோன்ற குழந்தை திருமணங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கிராமப் பகுதிகளில் குழந்தைத் திருமணத்தை தடுக்கும் வகையில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மக்களும் இதுபோன்ற விஷயங்களில் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதோடு, தங்களால் முடிந்த அளவு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.