Theni: ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு..போட்டா பெயிலு..- பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர் அலப்பறை!
பள்ளி ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தின் தேதானப்பட்டியில் ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. திடீரென்று ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட காரணம் என்ன?
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை ஒழுங்கின இல்லாததால் ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாணவரை அடுத்த நாள் பெற்றோர் உடன் வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார். இதற்கு அடுத்த நாள் அந்த மாணவர் பெற்றோர் இல்லாமல் வந்துள்ளார். இதுகுறித்து ஆசிரியர் கேட்ட போது அந்த மாணவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளதாக தெரிகிறது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அப்பள்ளியில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 17ஆம் தேதியும் அந்த மாணவர் பள்ளிக்கு கத்தியுடன் வந்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை கண்டித்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டம் செய்துள்ளனர். இந்தப் போராட்டம் தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் உறுதியளித்ததாக தெரிகிறது.
இந்தச் சூழலில் கத்தியுடன் வந்த மாணவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வீடியோ எடுத்து என்ன செய்ய முடியும். கழுத்த அறுக்க முடியுமா? குத்த முடியுமா? போலீஸ்காரரை குத்த திறமை இருக்கு. ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு, போட்டா பெயில் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது” என ஆவேசமாக அவர் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின்னர் அவர்களுடைய போராட்டம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:இரவு வேலைக்கு போவதாக கூறி கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற மனைவி: ஆத்திரத்தில் கணவர் வெறிச்செயல்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்