ஒரு சாக்குப் பையில் மனைவியின் உடல்; இன்னொரு பையில் கருங்கல் : த்ரிஷ்யம் பட பாணியில் நடந்த கொடூரம்!
பெண்களின் மீதும், குழந்தைகளின் மீதும் நடக்கும் எந்த ஒரு வன்முறையையும் அனுமதிக்காதீர்கள். உடனே புகாரளியுங்கள். குற்றவாளிகளிடமே அப்பாவிகளை ஒப்படைக்காதீர்கள்.
கேரளாவில் விஸ்மயா என்ற இளம் பெண் வரதட்சணைக் கொடுமையில் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள் இங்கே தமிழகத்தில் தேனிப் பக்கத்தில் அதுபோன்றதொரு வரதட்சணைக் கொடூரம் நடந்துள்ளது. தேனி ஃபாரஸ்ட்ரோடு 12வது தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஈஸ்வரன் (26). ராணுவ வீரரான இவருக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கல்லூத்து அஞ்சல், மகாலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் கிரிஜாபாண்டிக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆனது தொட்டே கிரிஜாவை சிவக்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஓராண்டில் இந்தத் துன்புறுத்தல் எல்லை கடந்து சென்றது. இதனால், 2019 ஆம் ஆண்டு கணவர் சிவக்குமார் மீது கிரிஜாபாண்டி வரதட்சணை புகார் கொடுத்தார். உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கிரிஜாபாண்டி கொடுத்த புகாரால் ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் ஈஸ்வரன் ராணுவத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், ஈஸ்வரன் மனைவி கிரிஜாபாண்டிக்கு ஒரு புதிய நிபந்தனை விதித்தார். அதாவது, நீ உன் அப்பா, அம்மாவுடன் பேசக்கூடாது. நான் உன்னை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன் என்பதுதான் அந்த ஒப்பந்தம். கிரிஜா வீட்டாரும் இதற்கு சம்மதித்தனர். மகள் வாழ்ந்தால் போதும் என்று நினைத்தனர்.
ஓராண்டாக மகளைப் பார்க்கவோ மகளுடன் பேசவோ செல்வம் குடும்பத்தினர் முயற்சிக்கவில்லை. இதற்கிடையில், குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையால் தனியே வசித்து வந்த ஈஸ்வரனின் தந்தை சிவக்குமார் உடல்நலக்குறைவால் பாதிப்படைந்தார். கடந்த ஆண்டு இறுதியில் மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் இருந்த சிவக்குமாரை பார்க்க செல்வம் சென்றார். அப்போதுதான் செல்வத்திடம் அவரது மகள் கிரிஜாபாண்டியை தனது மகன் ஈஸ்வரன் அடித்து கொடுமைப்படுத்திய விவரங்களை சிவக்குமார் கூறியுள்ளார்.
ஐய்யோ மகளிடம் பேசாமல் போய்விட்டோமே என்று பதறிக்கொண்டு சிவக்குமார் சொன்ன முகவரிக்கு செல்வம் விரைந்தார். ஆனால், அங்கு மகள் குடும்பம் இல்லை. அதன்பின்னர் எங்கெங்கோ தேடினார். ஏதும் புலப்படவில்லை. அதனால், இறுதியாக காவல்துறையில் தஞ்சமடைந்தார். காவல்துறை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தன் மீது வரதட்சணைப் புகார் கொடுத்து வேலைக்கு உலைவைத்த மனைவியை உலகை விட்டே அனுப்பிவிட்டதாக ஈஸ்வரன் கூறினார். மனைவியை அடித்தபோது அவர் ஸ்லாபில் மோதி உயிரிழந்ததாகவும் மனைவியின் உடலை தனது தாய் மற்றும் சகோதரர் உதவியுடன் முல்லைப் பெரியாறு ஆற்றில் வீசியதாகவும் கூறினார். ஈஸ்வரன் கொலை சம்பவத்தை விவரிக்க விவரிக்க போலீஸாரே ஆடிப் போயுள்ளனர். கடந்த, 2019-ஆம் ஆண்டு இறுதியில் தேனி ரத்தினம் நகரில் ஈஸ்வரன் கிரிஜா பாண்டி தம்பதி வசித்து வந்தனர்.
டிசம்பர் 25-ஆம் தேதி தம்பதியினருக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஈஸ்வரன் கிரிஜாபாண்டியனை தாக்கியுள்ளார். இதில் கழிப்பறையின் சிலாப்பில் மோதி கிரிஜாபாண்டியன் படுகாயமடைந்தார். அவரை சோதித்தபார்த்த ஈஸ்வரன் மனைவி இறந்துகிடக்கவே அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே குற்றத்தை மறைக்க சகோதரர் சின்ன ஈஸ்வரன், தாய் செல்வி ஆகியோ சதிக்கு துணையாக அழைத்துள்ளார். மூவரும் திட்டமிட்டு ஒரு சாக்குப்பையில் கிரிஜாபாண்டியின் உடலையும், மற்றொரு சாக்குப்பையில் கருங்கல்லையும் போட்டுக் கட்டி ஆற்றில் வீசத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சகோதரர்கள் இருச்சக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் சென்றதோடு அரண்மனைப் புதூர் பகுதியில் முல்லைப் பெரியாறு ஆற்றில் வீசியுள்ளனர். அதன்பின்னர் மூன்று ஆண்டுகளாக தேனியிலேயே பல்வேறு பகுதிகளில் வீடு மாறியுள்ளனர். 10 வீடுகள் வரை அவர்கள் மாறியதாகத் தெரிகிறது. இப்போது மூவரையுமே போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெற்றோர் கவனத்திற்கு..
உங்கள் மகளின் மீது உங்கள் குடும்ப கவுரவத்தை சுமத்தி அவளை சுமைதாங்கி ஆக்காதீர்கள். பெண் தான் குடும்ப மானத்தின் அடையாளம் என்று நிர்ணயிக்காதீர்கள். அவள் உங்கள் வழியாக உலகுக்கு வந்தவளே தவிர உங்களின் போலி கவுரவத்துக்கு கொடியேந்த வந்தவள் அல்ல. உங்கள் மகளின் திருமண பந்தம் சரியானதாக இல்லை என்றால் அவளை சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். குடும்ப வன்முறையில் சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு, நல்வாழ்வுக்கு தகுந்த வழிமுறைகளை அரசும், சமூகமும் அளிப்பது அவசியமாகிறது.