கொள்ளையடிக்கப்பட்ட 9 ஐம்பொன் சிலைகள் தேனி போலீசாரால் ஒரே நாளில் மீட்பு...!
’’கொள்ளைபோன 9 சிலைகளின் மொத்த எடை 212 கிலோ. அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 20 லட்சம்’’
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் வேதபுரி சித்பவாநந்த ஆசிரமத்துக்கு பாத்தியப்பட்ட தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவில் பின்புறம் உள்ள கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த தாயுமானவர், மாணிக்கவாசகர், வியாசர், சனகர், சனதனர், சனந்தர், சனந்தகுமாரர், நந்தி, பலிபீடம் ஆகிய 9 ஐம்பொன் சிலைகளையும், பித்தளை உண்டியலையும் அதில் இருந்த பணத்துடன் கொள்ளை அடித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
கோவில் சுற்றுச்சுவருக்கு வெளியே வனத்துறை நாற்றுப்பண்ணைக்குள் போலீசார் தேடிய போது அங்கு வியாசர் சிலையும், பலிபீடமும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே வீசிச் சென்றது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு இரும்பு கம்பியும், 190 ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, ஆசிரமத்தின் மேலாளர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் பால்சுதிர், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பழனிசெட்டிபட்டி ஆய்வாளர் மதனகலா, சார்பு ஆய்வாளர் அசோக், சுந்தரலிங்கம், ராமபாண்டியன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவர் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருப்பதும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அவர் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தானும், தனது பள்ளிப்பருவ நண்பரான பெரியகுளம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (23) என்பவரும் சேர்ந்து சிலைகளையும், உண்டியலையும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் உண்டியலை முல்லைப்பெரியாற்றில் வீசிவிட்டு, சிலைகளை பெரியகுளம் அருகே கும்பக்கரையில் இருந்து அடுக்கம் செல்லும் மலைப்பாதையில் உள்ள புதருக்குள் மறைத்து வைத்துள்ளதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார். அதன்பேரில் கும்பக்கரைக்கு போலீசார் விரைந்தனர்.
அங்கு புதருக்குள் கிடந்த 7 சிலைகளையும் போலீசார் மீட்டனர். கொள்ளையடித்த சிலைகளை மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்று பதுக்கி வைத்ததாகவும் ஸ்ரீதர் கூறினார். இதையடுத்து இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளி கார்த்திக் தலைமறைவாகியுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்தும், சிலைகளை மீட்ட தனிப்படை போலிசாருக்கு தேனி மாவட்ட போலீஸ் காவல் கண்காணிப்பளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். தட்சிணாமூர்த்தி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது.
கொள்ளைபோன 9 சிலைகளின் மொத்த எடை 212 கிலோ. அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் 20 லட்சம். கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்த போது, இந்த வழக்கில் கைதான ஸ்ரீதர் மீது தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சிலை கடத்தல் வழக்கு பதிவாகி இருந்தது தெரியவந்தது. அவர் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பான ஒரு வழக்கில் சிறையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்த போது, கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஒப்பு கொண்டார். கைதான ஸ்ரீதர் மீது திருப்பூர் மாவட்டம் அனுப்பூர் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, தென்கரை, பெரியகுளம் பகுதிகளில் திருட்டு, அடிதடி வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.