'கொலை பன்றது ரொம்ப ஈஸி...மறைக்கிறது கஷ்டம்...! - 3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை...!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முத்து என்பவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; கொலைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட குணசேகரன் கடந்தாண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை என்பவரின் மகன் முத்து, 35 வயதாகும் இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை, தந்தை அழகுமலை தனது பூர்வீக சொத்துக்களை முத்து உள்ளிட்ட நான்கு மகன்களுக்கு பிரித்து கிரையம் செய்து கொடுத்திருந்தார். தனக்கு கிடைத்த சொத்துக்களை விற்று தொடர்ந்து மதுவுக்காக செலவழித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முத்து காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் சாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பனங்காட்டு பகுதியில் இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் எரிந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் காணாமல் போன முத்து என்பதும் அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்தது.
முத்துவின் கொலை குறித்து சாயல்குடி போலீசார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வேதம் மாணிக்கம் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினரான குணசேகரன் என்பவரிடம் முத்து ரூபாய் 50 ஆயிரத்தை கடனாக வாங்கி இருந்ததாகவும், கொடுத்த பணத்திற்கு ஈடாக தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 20சென்ட் இடத்தை குணசேகரனுக்கு எழுதிக் கொடுப்பதாக முத்து உறுதி அளித்திருந்ததாக கூறிய வேத மாணிக்கம், கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் முத்து தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் குணசேகரனும் அவரது உறவினர்களான பால்பவுன்ராஜ், ஜோசப் ராஜன் ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்துவை காரில் கூட்டிச் சென்று மது குடிக்க வைத்து இரும்பு பைப்பால் தலையில் அடித்து கொன்று எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
முத்துவை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியான குணசேகரன் கடந்த ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டநிலையில், முத்துவின் கொலைக்கு காரணமாக இருந்த வேதமணிக்கம் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.