Crime: தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் திருடிய வங்கி தற்காலிக ஊழியர் கைது
முருகானந்தம் தான் வேலை பார்க்கும் வங்கியில் யாருக்கும் தெரியாமல் பணம் எண்ணும் இயந்திரம் அருகே இருந்த ரூ.9 லட்சத்தை திருடி உள்ளார்.
தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.9 லட்சத்தை திருடிய வங்கியின் தற்காலிக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை நகரின் மையப்பகுதியாக விளங்கும் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் தஞ்சை மாவட்டம் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முருகானந்தம் தான் வேலை பார்க்கும் வங்கியில் யாருக்கும் தெரியாமல் பணம் எண்ணும் இயந்திரம் அருகே இருந்த ரூ.9 லட்சத்தை திருடி உள்ளார். தொடர்ந்து பணத்தை காணவில்லை என்பதால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் தற்காலிக ஊழியர் முருகானந்தம் பணம் திருடிய காட்சி பதிவாகி இருந்ததை பார்த்து மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடன் இது குறித்து தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பைக்கில் புகையிலை பொருள் கடத்தியவர் கைது
தஞ்சையில் பைக்கில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை சீனிவாசபுரத்தில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வேகமாக வந்த ஒரு பைக்கை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 16 கிலோ புகையிலைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து பைக்கில் வந்தவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் (47) என்பது தெரிய வந்தது. இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 16 கிலோ புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
5 பேர் கைது
தஞ்சையில் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாரிக்குளம் சுடுகாட்டில் சிலர் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி அந்த வழியாக சென்ற பொது மக்களை மிரட்டி அச்சுறுத்துகின்றனர் என்று தஞ்சை தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அரிவாள் மற்றும் உருட்டு கட்டைகளை காட்டி பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருந்த தஞ்சை விளார் ரோடு காயிதே மில்லத் நகரை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ரமேஷ் (30), கலைஞர் நகரை சேர்ந்த ராஜகோபால் மகன் மோகன் (22), அண்ணா நகரை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (33), முத்துச்சாமி மகன் ரவீந்திரன் (39), மேல அலங்கம் பகுதியை சேர்ந்த சங்கோணி மகன் ரத்தினகுமார் (39) 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதில் ரமேஷ் மீது தாலுகா போலீசில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.