என்ன ஏட்டையா... இதெல்லாம்...! கேரள வனப்பகுதியில் துப்பாக்கியோடு சென்ற ஏட்டு சஸ்பெண்ட்!
நண்பர்களுடன் நடுகாட்டில் சீன் போட துப்பாக்கியுடன் புறப்பட்ட ஏட்டைய்யா... இப்போது அறைக்குள் வைத்து பூட்டைய்யா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தாலாட்டு கேக்குதம்மா படத்தில் ஊருக்குள் புலி வந்ததாக செந்தில் சொல்லும் கட்டுக்கதையை நம்பி, கையில் துப்பாக்கியோடு கவுண்டமணி ஊருக்கும் புலியை பிடிக்கச் செல்லும் நகைச்சுவை காட்சியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. சுடப்போகிறார் என்பதை விட அவர் துப்பாக்கியை எடுத்துச் செல்லும் ஸ்டைல் தான் அந்த நகைச்சுவை காட்சியை இன்னும் மெருகேற்றியிருக்கும். அப்படி ஒரு சம்பவம் கேரள வனப்பகுதியில் நடந்துள்ளது. அதுவும் நம்ம ஊரு ஏட்டு ஒருவர், அந்த சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார். ஆனால் இது நகைச்சுவை அல்ல கொஞ்சம் சீரியஸ்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தங்கா வனச்சரகத்திற்கு உட்பட்ட தோட்டமூலா வனப்பகுதி உள்ளது. இங்கு கடந்த அக்டோபர் 19 ம் தேதி துப்பாக்கியுடன் சிலர் சென்றுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் வனத்துறையினர் சிசிடிவியில் பதிவானது. இதைத் தொடர்ந்து ரேஞ்சர் சுனில்குமார் அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டார். பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றும் 42 வயதான சிஜீ என்பவர் தான் துப்பாக்கியுடன் சென்றார் என்பது தெரியவந்தது. அவருடன் சிலர் நண்பர்களும் சென்றுள்ளனர்.
அந்த வீடியோ காட்சிகளை உறுதி செய்த பின் இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் வனத்துறை ரேஞ்சர் சுனில்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக ஏட்டு சிஜீ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஏட்டு மற்றும் அவர் உடன் சென்ற நண்பர்களிடம் தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள வனப்பகுதியில் துப்பாக்கியுடன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? வேட்டை நோக்கமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஏட்டையா பயன்படுத்தியது யார் உடைய துப்பாக்கி, அவருக்கு வழங்கப்பட்டதா என்கிற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. நண்பர்களுடன் நடுகாட்டில் சீன் போட துப்பாக்கியுடன் புறப்பட்ட ஏட்டைய்யா... இப்போது அறைக்குள் வைத்து பூட்டைய்யா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது இரு மாநில எல்லைக்கு உட்பட்ட விவகாரம் என்பதால், இதை இன்னும் தீவிரமாக விசாரிக்க இரு மாநில வனத்துறையும் முடிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்