மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை அட்டூழியம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மீனவர்களே இந்த தாக்குதலுக்கு அதிக அளவு ஆளாகி வருகின்றன. இதற்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது வரை இதற்கு ஒரு உரிய தீர்வு இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது நடந்தேறி வருகிறது.
இந்நிலையில் அதேபோன்று மீண்டும் இன்று ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், அருண் குமார், மாதவன், காசி, முருகன் மற்றும் படகின் உரிமையாளர் உள்ளிட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர். அவர்கள் இன்று காலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டதுடன் இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
Ind vs Aus: கவலை வேண்டாம்.. களமிறங்கினார் கேப்டன் ஹர்மன்பிரீத்..! அணியில் யார்? யார்?
இதில் ஐந்து மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன் ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை கரை திரும்பிய மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையினர் படகில் இருந்த இன்ஜினை பறித்துக் கொண்டு தங்களை கொடூரமாக தாக்கியதாகவும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்களுக்கு பொறையார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.