அரசு தொலைக்காட்சி அலுவலக கழிப்பறையில் கேமரா: அலறி வெளியேற பெண்... அச்சத்தில் பிரபலங்கள்!
ஸ்டூடியோவிற்கு பெரும்பாலும் சிறப்பு விருந்தினர்கள், குறிப்பாக அழகான தொகுப்பாளர்கள் வருவார்கள்.
ஸ்பை கேமராக்கள், குற்றங்களை கண்டறியவும், உளவுப்பணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட அரிய சாதனம். ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது அது கையில் இருப்போர் மனநிலையை பொருத்தது. அப்படி தான், கேமராக்கள், ஒரு அச்சுறுத்தல் சாதனமாக சமீபத்தில் மாறி வருகிறது. பெரும்பாலும் பாலியல் குற்றங்களுக்கு தான் ஸ்பை கேமராக்களை பலர் பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்துவோர், எளிதில் சிக்கி கொள்வதும், பின்னர் அவர்கள் சிறை செல்வதும் நாம் தொடர்ந்து பார்த்தும், படித்து வருகிறோம். துணிக்கடையில் கேமரா, நகைக்கடையில் கேமரா, விடுதியில் கேமரா, சில சமயங்களில் பாத்ரூம், கழிப்பறைகளில் கூட கேமரா வைத்து ரகசியமாக ஆபாச குற்றங்கள் புரிந்தோர் தொடர்ந்து பிடிபட்டு வருகின்றனர். இப்போது நாம் பார்க்கவிருப்பதும் அது மாதிரியான ஒரு அதிர்ச்சி தகவல் கொண்ட செய்தி தான். ஆனால், அது நடந்த இடம் அதை விட அதிர்ச்சியானது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் முக்கோலாவில் அரசு தொலைக்காட்சியின் அலுவலகம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொலைக்காட்சி என்பதால் ஸ்டூடியோ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு உண்டு. அங்குள்ள ஸ்டூடியோ அருகே, பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை ஒன்று உள்ளது. வழக்கம் போல நேற்று முன்தினம் பெண் ஊழியர் ஒருவர், அந்த கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அப்போது தான் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அங்கு ஸ்பை கேமரா மறைக்கப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். உடனே அதிர்ந்து போன அவர், உடனடியாக வெளியே வந்து, உள்ளே கேமரா இருக்கும் விசயத்தை தன் சக பணியாளர்களிடம் தெரிவித்தார். அது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த கேமராவை கைப்பற்றினர். அதன் பின் வெளியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அந்த கேமராவை அங்கு பணியாற்றும் தற்காலிக ஊழியர் ஒருவர் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்டூடியோவிற்கு பெரும்பாலும் சிறப்பு விருந்தினர்கள், குறிப்பாக அழகான தொகுப்பாளர்கள் வருவார்கள். அவர்களை வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டுவதற்கோ, அல்லது இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிப்பதற்கோ தான் இந்த முயற்சி நடந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தற்காலிக ஊழியரிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எப்போது அந்த கேமரா வைக்கப்பட்டது. அதில் பதிவான காட்சிகள் எப்போது சேகரிக்கப்பட்டது, சேகரிக்கப்பட்ட காட்சிகளில் என்ன ஆனது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தனி நபர் குற்றமா... அல்லது வேறு நெட்வொர்க் எதுவும் இதன் பின்னணியில் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் போலீசாரிடம் இருக்கும் நிலையில், இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது.