மேலும் அறிய
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
செய்தியாளர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என மிரட்டிய காவல் ஆய்வாளர் – “வழக்குப்பதிவு செய்வேன்” என எச்சரிக்கை

இளையான்குடி காவல் ஆய்வாளர் துரைராஜ்
Source : whatsapp
தெ.புதுக்கோட்டையில் நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டகாசம் – அடுத்தடுத்து 3 பேர் மீது அரிவாள் வெட்டு.
மர்ம கும்பல் அரிவாளால் தாக்கியதாக புகார்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட தெ.புதுக்கோட்டை கிராமத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பவர் நள்ளிரவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இறப்பு நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் இருந்த சின்னசாமி (65), “யார் நீங்கள்?” என கேட்டதாகவும், அவரையும் மர்ம கும்பல் அரிவாளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கண்ணீர் மல்க கோரிக்கை
தொடர்ந்து அங்கிருந்து சென்ற மர்ம கும்பல், குறிச்சி அருகே பூமி (55) என்பவர் வீட்டின் அருகே தூங்கிக் கொண்டிருந்த அவரையும் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் இருந்து தப்பி வீட்டிற்குள் சென்ற பூமியை மர்ம நபர்கள் மீண்டும் பின்தொடர்ந்து சென்றதாகவும், வீட்டில் இருந்த பெண்களை மிரட்டி விளக்கை போடச் சொல்லியதுடன், பீரோ உள்ளிட்ட பொருட்களையும் அரிவாளால் தாக்கி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த ராஜேந்திரனுக்கு முதற்கட்டமாக மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்ணீர் மல்க நடந்த சம்பவத்தை கூறி தங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல்
அப்போது அங்கு வந்த இளையான்குடி காவல் ஆய்வாளர் துரைராஜ், செய்தியாளர்கள் வீடியோ பதிவு செய்வதை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், “அவர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என வீட்டின் உரிமையாளரிடம் கூறியதுடன், செய்தியாளர்களை பார்த்து, “வீடியோ எடுக்காதீர்கள், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்வேன்” என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் தங்களது பிரச்னைகளை தெரிவித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த நிலையில், அதனை பதிவு செய்ததற்காகவே செய்தியாளர்களிடம் காவல் ஆய்வாளர் இந்த வார்த்தையை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. மக்களின் பிரச்னைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை வெளிக்கொண்டு செல்வதே பத்திரிகையாளர்களின் பணியாக உள்ள நிலையில், செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடும் செய்தியாளர்களை காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டுவதாக கூறப்படும் சம்பவத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















