‛குழந்தை பிறந்த நேரம் சரியில்லை... ’ ஜோதிடர் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவர் குடும்பம்!
‛குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் அந்த குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கே ஆபத்து,’ என ஜோதிடர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுதூர் காந்திநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். சேலம் உருக்காலை அருகே உள்ள கொலப்பட்டியைச் சேர்ந்த ராஜா மகள் கவுசல்யா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வெங்கடேசன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த முதல் வருடத்தில் இவர்குளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
வெள்ளி வியாபாரியான வெங்கடேசன், ஆன்மிக நடவடிக்கைகளில் அதீத ஆர்வம் காட்டுபவராக இருந்துள்ளார். எதற்கெடுத்தாலும் ஜோதிடம் மூலம் தீர்வு காண்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் அடிக்கடி ஜோதிடம் பார்ப்பதும், ஜோதிடர்களை கூறுவதை பின்பற்றுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார் வெங்கடேசன். தொழில் ரீதியாகவும் சரி, குடும்ப ரீதியாகவும் சரி, ஜோதிடர்கள் வாக்கு தான் வெங்கடேசனுக்கு தெய்வ வாக்காக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு தொழில் ரீதியாகவும், மனரீதியாகவும் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன், ஜோதிடர் ஒருவரை சந்தித்துள்ளார். ‛குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்றும் அந்த குழந்தை வீட்டில் இருந்தால் குடும்பத்திற்கே ஆபத்து,’ என ஜோதிடர் கூறியுள்ளார். அதை அப்படியே நம்பிய வெங்கடேசன், தன் குடும்பத்தாரிடம் விபரத்தை கூறியுள்ளார். குடும்ப நலன் கருதி குழந்தையை அங்கிருந்து விரட்ட முடிவு செய்த வெங்கடேசன் குடும்பத்தினர், கவுசல்யாவை கொடுமைபடுத்த துவங்கியுள்ளனர். இந்த டார்ச்சர் படலம் ஆண்டுகளை கடந்து தொடர ஆரம்பித்தது.
ஒவ்வொரு முறை அடித்து விரட்டும் போதும், இரும்பாலை காவல்நிலையத்தில் கவுசல்யா புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரை அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, குழந்தையுடன் கவுசல்யாவை டார்ச்சர் செய்வதை அவர்கள் நிறுத்தவில்லை. இருவரையும் வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து மனமுடைந்த கவுசல்யா, தனது குழந்தையுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார். தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், தங்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். ஆனால் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வாய்ப்பு வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து அதனை கண்ட பொதுமக்கள், காவல் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு தகவலை பரிமாற்றம் செய்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரி உத்தரவில், சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு கவுசல்யா அனுப்பப்பட்டார். அங்கு, சம்பவம் நடந்த இடம் கொண்டலாம்பட்டி என்பதால் அங்குள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து கவுசல்யா ஏமாற்றத்துடன் அங்கிருந்த புறப்பட்டார்.