அடுத்த அதிர்ச்சி... சேலம் அரசுப்பள்ளியில் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!
மாணவியின் இந்த முயற்சிக்கு என்ன காரணம் என சரிவர தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம், கலவரமாக மாறி, கடந்த இரண்டு நாட்களாக பேசும் பொருளாகவும், விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. நடந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரமும் தற்போது உயர்நீதிமன்றம் வரை சென்றிருக்கும் நிலையில், அந்த சூடு தணிவதற்குள், அடுத்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். யாரிடமும் பேசாமல் நீண்ட நேரம் மவுனமாக இருந்த அவர், வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டுள்ளார். பின்னர் அவர் இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்ற மாணவி சிறிது நேரத்தில் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், கூச்சலிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு திரண்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், படுகாயம் அடைந்த மாணவி மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவியின் இந்த முயற்சிக்கு என்ன காரணம் என சரிவர தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் மேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
‛‛பள்ளி மாணவியிடம் முழுமையாக விசாரித்துவிட்டோம். குடும்பப் பிரச்சினை காரணமாகவே மாணவி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததில், சிறுமியின் கால் முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மாணவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை நன்றாக உள்ளார். மாணவியின் மனிநிலை அறிந்து அவருக்கு கவுன்சிலிங் வழங்கி வருகிறோம்,’’ என்று கூறினார்.
‛‛வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்கள் நிகழும் போதெல்லாம், சிபி-சிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்,’’ என்றும், சற்று நேரத்திற்கு முன்பாக தான், உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அரசுப்பள்ளியில் மாணவி ஒருவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகம் தரப்பில் விசாரணை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர் தரப்பில் இதுவரை வேறு எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை. தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாணவியின் இந்த முடிவு குறித்து பெற்றோரிடமும், பள்ளியில் உள்ள சக மாணவிகளிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.