திண்டுக்கல் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை: கார் ஓட்டுநர் மாஸ்டர் பிளான் - நடந்தது என்ன?
முன்பின் தெரியாத நபர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பாக குண நலன் தெரிந்து தீவிர விசாரணை செய்து பின்னர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் அழகப்பன் (வயது 49). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சமுத்திராப்பட்டியில் இருந்து சிறுகுடி செல்லும் சாலையில் உள்ள இவருக்கு சொந்தமான வீட்டில் இவரும் இவரது வயதான தாய் சொர்ணம் (75) என்பவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு வீட்டில் பின்புறம் உள்ள தோட்டத்தின் வழியாக கொள்ளையர்கள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் இருந்த அழகப்பனிடம் கத்தியை காட்டி மிரட்டி 20 கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் அதனை தருமாறு கூறி கத்தியை காட்டி மிரட்டி காயத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். உடனே அவர் கூச்சலிடவே பொதுமக்கள் ஒன்று கூடினர். அப்போது கொள்ளையர்கள் தப்பி ஓடினர். ஆனால் அதில் ஒருவனை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தபோது காவலர்களிடமிருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் காயம் அடைந்த அழகப்பன் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பிரதீப், ரூரல் டி.எஸ்.பி சிபிசாய் சௌந்தர்யன்,நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் விசாரணை செய்த நிலையில் , இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நத்தம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இது தொடர்பாக விசாரணையை தீவிர படுத்திய காவல்துறையினர் சிசிடிவி கேமராக்கள், காரின் மாடல்,தொலைபேசி சிக்னல் ஆகியவற்றை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் , இச்சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் கொட்டக்குடியை சேர்ந்த பிரபா(28),சாந்தகுமார்(31),முத்து வெங்கடாஜலபதி(29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்த நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அழகப்பனிடம் கார் ஓட்டுனராக பணிபுரிந்த சிவகங்கை மாவட்டம் காளாப்பூரை சேர்ந்த மணிமொழியன் (45), பொன்டைப்பட்டி பாபு(41), மதுரை மாவட்டம் சருகுவலையப்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ்(39), நத்தம் அண்ணா நகரை சேர்ந்த பிரபாகரன் (60)ஆகியோரை கைது செய்த நத்தம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பனின் கார் ஓட்டுனராக பணிபுரிந்த மணிமொழி அழகப்பனிடம் கார் ஓட்டிக்கொண்டே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அழகப்பனுடன் பல இடங்களுக்கு சென்று வந்த நிலையில் அழகப்பனிடம் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் பணம் புழங்குவதை தெரிந்து கொண்ட மணிமொழியன் அழகப்பன் இடம் ஓட்டுனராக பணிபுரிவதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் மணிமொழி தனது கூட்டாளிகளான பாக்கியராஜ், பாபு பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து அழகப்பனிடம் டபல கோடி ரூபாய் பணம் உள்ளது எனவே அவரது வீட்டில் கொள்ளை அடிக்கலாம் பிளான் போட்டுள்ளனர். இதற்காக பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபா, சாந்தகுமார்,முத்து வெங்கடாசலம்,மதுரை மாவட்டம் கீழவளவை சேர்ந்த வெள்ளையதேவர், சூத்தான் என்ற சின்னதம்பி ஆகியோருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்து குற்ற சம்பவத்தில் இறங்கி உள்ளனர். சம்பவத்தின் போது பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக மணிமொழியன் பாக்கியராஜ், பாபு, பிரபாகரன்,பிரபா, சாந்தகுமார்,முத்து வெங்கடாசலம் ஆகியோரை கைது செய்த நத்தம் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் இதுதொடர்பாக வெள்ளையதேவர் சூத்தான் என்ற சின்ன தம்பி ஆகிய இருவரை தேடி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் கார் ஓட்டுனராக இருந்த மணிமொழியன் தான் குற்றச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது போலீஸ் விசாரணையில் தற்போது வெளிச்சம் ஆகி உள்ளது காரின் நம்பர் பிளேட் இல்லாத நிலையில் காரின் மாடலை வைத்தும்,செல்போன் சிக்னலை வைத்தும் குற்றவாளிகளை புலன் விசாரணை செய்து தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் முன்பின் தெரியாத நபர்களை வேலைக்கு அமர்த்தும் முன்பாக குண நலன் தெரிந்து தீவிர விசாரணை செய்து பின்னர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது





















