(Source: ECI/ABP News/ABP Majha)
PUBG Madhan: தலைமறைவு இன்றல்ல 2017 ல் இருந்தாம்.... கடன் மோசடி செய்த மதனின் பகீர் பின்னணி!
வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தப்பி வந்த மதன், இன்று 2 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாக்கள் வாங்கி மங்களமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அவர் செய்த முதலீடு ஆபாசம்.
ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது புகார் குவிந்து வருகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், தற்போது சென்னை பெருங்களத்தூரில் தங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மதன் தலைமறைவாக உள்ள நிலையில், அவருக்கு முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஆபாச வார்த்தைகளால் அதிருப்தி ஆன நீதிபதி, ‛முதலில் அவர் பேச்சை கேட்டு விட்டு வாருங்கள்,’ என, ஜாமின் வழங்க நேற்று மறுத்துவிட்டார். இதற்கிடையில் மதன் சரணடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, மதனின் மறுபக்கங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
ஓட்டல் நஷ்டம்... தலைமறைவான மதன்!
கடந்த 2017 ம் ஆண்டு அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தில் அசைவ உணவகம் ஒன்றை மதன்குமார் நடத்தியுள்ளார். இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் எதிர்பார்த்த அளவு உணவகத்தில் வருவாய் இல்லை. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்த மதன், கடைக்கு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கி இருந்த போதே மதன் தலைமறைவாகியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த வாடகை பாக்கி ரூ.2 லட்சம். அந்த கட்டடத்தின் உரிமையாளரான கஜபதி என்பவர், அம்பத்தூர் காவல்நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்து, அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. அதன் பிறகு தான், மதன் தீவிரமாக பப்ஜி விளையாட்டில் இறங்கி பணம் பார்க்கத்துவங்கியுள்ளார். தனது உருவத்தை வெளியிட்டால் தன்னை தேடும் கடன்காரர்கள் மற்றும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக தான், தன்னை அடையாளம் தெரியாத நபராக கடைசி வரை காட்டிக்கொள்ள முயற்சித்திருக்கிறார். கடைசியில் அது தான் தனது தொழிலுக்கும் பாதுகாப்பு என கருதி, அதை தனது அடையாளமாகவும் மாற்றிக்கொண்டார்.
சிக்கும் 20 நண்பர்கள்!
மதனுக்கு பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரம் இருந்துள்ளது. அவரது வருவாய் மாதம் ரூ.7 லட்சம் என முதலில் கூறப்பட்ட நிலையில், பின்னர் அது 12 லட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. மதனின் இந்த வளர்ச்சிக்கு அவர் வெளியிடும் வீடியோ தான் காரணம் என்பதை அவரது நண்பர்கள் அறிந்திருந்தனர். அவர் அனுமதியோடு, மதனின் வீடியோக்களை தங்களின் யூடியூப் பக்கங்களில் பகிர்ந்து அவர்களும் கணிசமான பணத்தை சம்பாதித்து வந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் வீடியோ பகிர்வு வெளிச்சத்து வந்துள்ள நிலையில் , சம்மந்தப்பட்ட 20 நண்பர்களும் இந்த விவகாரத்தில் சிக்க உள்ளனர்.அதுமட்டுமின்றி, அவர்களுக்கு உதவியவர்களும் சிக்கலாம்.
மூன்று இன்டர்நெட் இணைப்புகள்
மதன் தனது பப்ஜி தொழிலுக்கு மூன்று இணைய இணைப்புகளை பெற்றுள்ளார். அவை மூன்றுமே அதி வேக இன்டர்நெட் சேவைகள். தனது தொழிலிலுக்கு தொழில்நுட்பம் முக்கியம் என்பதால், அதிகவேக இன்டர்நெட் பயன்படுத்தியுள்ளார். அவர் பயன்படுத்திய வி.பி.என்., சேவை மூலம் வெளிநாடுகளிலிருந்து தடை செய்யப்பட்ட பல கேம்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தியுள்ளார். பப்ஜி தடை செய்யப்பட்டபோதும், அதையும் விபிஎன் பயன்படுத்தியே விளையாடி வந்துள்ளார். இது போல் இன்னும் பல இணைவழி குற்றங்களை அவர் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தப்பி வந்த மதன், இன்று 2 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாக்கள் வாங்கி மங்களமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அவர் செய்த முதலீடு ஆபாசம். இப்போது அதற்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீசார். விரைவில் மதன் கைதான பின், இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரலாம்.