Suraj Revanna: ஆண் ஊழியருக்கு பாலியல் தொல்லை! தம்பியை தொடர்ந்து அண்ணன் சுராஜ் ரேவண்ணா கைது
Suraj Revanna: பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் மூத்த சகோதரரும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான ஆண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
சூரஜ் ரேவண்ணா கைது:
கர்நாடகவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா, பாலியல் குற்றச்சாட்டின் கீழ் இன்று ( ஜூன் 23 ) கைது செய்யப்பட்டார். 27 வயதான ஆண் ஊழியரை பாலியல் கொடுமை அளித்ததாக, அவர் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து , நேற்று இரவு முழுவதும், காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.
ஊழியர் புகார்:
பி.டி.ஐ. செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேத்தன் என்பவர் அளித்த புகாரில், ஜூன் 16 மாலை ஹோலேநரசிபுரா தாலுகாவில் உள்ள கன்னிகடாவில் உள்ள பண்ணை வீட்டில் எம்.எல்.ஏ. ஹெச் டி ரேவண்ணாவின் மூத்த மகனுமான, பிரஜ்வல் ரேவண்ணாவின் மூத்த சகோதரருமான சூரஜ் ரேவண்ணா பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்தார்.
இதையடுத்து, சூரஜ் கைது செய்யப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணா, பல பெண்களை ஏமாற்றி , பாலியல் தொல்லை அளித்து, வீடியோ எடுத்து மிரட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது சிராஜ்-க்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான பாலியல் உறவு) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் ஹொலேநரசிபுரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.