37 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான நிரபராதி.. செக்ஸ்,போதைப்பொருள் கொடுத்து பொய் சாட்சி சொல்லவைத்த காவலர்கள்..
37 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் சிறையில் இருந்து நிரபராதி என்று வெளியிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்ற கூற்று உள்ளது. இருப்பினும் அவ்வப்போது காவல்துறையினர் அளிக்கும் சாட்சியங்களை வைத்து ஒரு சில நிரபராதிகளும் நீதிமன்றத்தால் தண்டிக்க படுகின்றனர். அப்படி ஒரு சம்பவத்தில் நிரபராதி ஒருவர் 37 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? எப்படி விடுவிக்கப்பட்டார்?
அமெரிக்காவின் பிலேடில்பியா பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் ஸ்டோக்ஸ்(61). இவரை கடந்த 1984ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் தொடர்பாக காவல்துறை கைது செய்தது. அதன்பின்பு அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. அப்போது காவல்துறை சமர்பித்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் ஸ்டோக்ஸிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து வில்லியம் ஸ்டோக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார்.
அவருடைய குடும்பத்தினர் இது தொடர்பாக தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்துள்ளனர். இந்த வழக்கில் சமீபத்தில் 1984ஆம் ஆண்டு வழக்கு விசாரணையின் போது சாட்சி கூறிய லீ என்ற நபர் பொய் சாட்சியம் அளித்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஃபிராங்க்ளின் லீ என்ற அந்த நபர் ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில குற்றங்களுக்காக சிறை தண்டனை பெற்றவர். இவரை வைத்து காவல்துறையினர் பொய் சாட்சியம் தயாரித்தாக கூறப்பட்டது.
அதாவது லீக்கு போதை பொருட்கள் மற்றும் செக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டு இந்த வழக்கில் பொய் சாட்சி கூறுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியுள்ளனர் என்று வாதிடப்பட்டது. இதற்கான ஆதாரங்களும் தற்போது நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பார்த்த நீதிபதிகள் வில்லியம் ஸ்டோக்ஸ் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவரை விடுவித்தனர். இதனால் 37 ஆண்டுகாலம் சிறைவாசம் வாசம் முடித்த பிறகு அவர் நிரபராதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்டோக்ஸ், “நான் நிரபராதி என்பது எனக்கு தெரியும். எப்படி நிச்சயம் ஒருநாள் உண்மை வெளியே வரும் என்று நம்பினேன். தற்போது உடனடியாக சென்று என்னுடைய தாயை கட்டி அணைக்க விரும்புகிறேன். இத்தனை நாட்கள் அவரை பார்க்காமல் இருந்தது. அவருக்கு சோகத்தை தந்தது ஆகிய அனைத்திற்கும் இன்று தீர்வு கிடைத்துள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்” எனக் கூறினார். 37 ஆண்டுகாலம் காவல்துறையினரின் தவறான போக்கால் அவர் தண்டனையை அனுபவித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது
மேலும் படிக்க: 2029ல் பூமியை நெருங்கும் அபாயகரமான சிறுகோள்..! ஆபத்தை எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!