2 திருமணம் செய்தவரை காதலித்து மணந்த மகள்: தூக்கில் தொங்கிய தாய்... விஷம் குடித்து மாண்ட தந்தை!
ஊத்துக்கோட்டை அருகே மகள் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் தாய், தந்தை இருவர் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைசெல்வன், அறுபது வயதாகும் இவர் ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சரளாவுக்கு வயது 55. இவர்களுடைய 28 வயது மகள் அர்ச்சனா, செங்குன்றம் அருகே இரட்டை ஏரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவர், தினசரி வேலைக்கு பேருந்தில் சென்றபோது, அக்கரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணபதி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. கணபதி போலீஸாக பணியாற்றி சஸ்பெண்ட் செய்யபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து இருவரையும் பிரிந்து வாழ்கிறார். தற்போது, சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களின் காதல் பற்றி அறிந்த அர்ச்சனாவின் பெற்றோர், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டர்கள் என்று உறுதியானதும் கடந்த மாதம் 27-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ரிஜிஸ்டர் ஆஃபிஸில் பதிவு செய்து திருமணம் செய்து கொண்டனர். அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்திருந்த அவர் 3 வதாக அர்ச்சனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தங்களது ஒரே மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தங்களை பிரிந்து சென்றதால் தாய், தந்தை இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
நேற்று காலை தாமரைசெல்வன் வயலுக்கு சென்ற நிலையில், மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் மின்விசிறியில் தனது மனைவி சரளா, தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே மகள் திருமணத்தால் விரக்தியில் இருந்த தாமரைசெல்வன் மேலும் விரக்தி அடைந்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். அக்கம்பக்கத்தினர் யதார்த்தமாக வந்து பார்க்கும் போது இறந்து கிடந்த சரளாவையும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாமரை செல்வனையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தாமரை செல்வனையாவது காப்பாற்றிவிடலாம் என மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். கிராம மக்கள் இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல்துறைக்கு தகவல் கொடுத்தள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் தலைதூக்குமாயின் மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.