ABP Nadu Exclusive: தூத்துக்குடி கடற்கரை பகுதியில் கொட்டிக்கிடக்கும் வலி நிவாரணி ஊசிகள்... போதையால் தடுமாறும் இளைஞர்கள்..!
போதை பழக்கங்களால் மன அழுத்தம், மனச்சிதைவு இளைஞர்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறும் மருத்துவர்கள் , போதையால் தடம் மாறுபவர்களை கண்காணித்து சிகிச்சை அளிப்பது அவசியம் என்கின்றனர்.
தமிழகத்தில் போதை வஸ்துகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட காவல்துறை, க்யூ பிரிவு , உளவுத்துறை என அனைத்து பிரிவுகளும் ரவுண்டு கட்டி சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
போதைப்பழக்கம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இலங்கைக்கு கடத்தப்படும் பீடி இலை, டீசல் கடத்தப்படுவதை தொடர் கண்காணிப்பில் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். அதையும் மீறி கடத்தலும் தொடரத்தான் செய்கிறது. சமீப காலமாக போதையால் இளைஞர்கள் தடம் மாறும் நிலை உள்ளது.
கடற்கரையில் போதை ஊசிகள்:
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இளைஞர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள தூண்டில் வளைவில் போதைக்காகவோ அல்லது எதற்கென தெரியாமல் ஊசிகளை பயன்படுத்துவதாக அப்பகுதியை சேர்ந்தவர் தெரிவித்தத்தை தொடர்ந்து கள ஆய்வில் இறங்கினோம். திரேஸ்புரம் பகுதியில் கடல் தொழிலுக்காக சென்று திரும்பிய மீனவர்கள் தங்களது நாட்டுப்படகில் இருந்து மீன்களை ஏலக்கூடத்திற்கு கொண்டு செல்லும் வேலையில் மும்முரமாக இருந்தனர். வலையில் இருந்த சாளை மற்றும் நெத்திலி மீன்களை பிரித்து கொண்டு இருந்தனர்.
அதனை பார்த்து கொண்டே நடந்தோம். காலை 10 மணிக்கே உச்சி வெயில் மண்டையை பிளக்க ஆரம்பித்து இருந்தது. தூத்துக்குடியின் ஒட்டுமொத்த கூவமான பக்கிள் ஓடை கழிவு நீரால் கடலின் நிறம் கருமையாக மாறி இருந்தது. அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தூண்டில் பாலம் மீதேறி நடக்க துவங்கினோம். ஆங்காங்கே ஊசிகள், மருந்து பாட்டில்கள் என குறைவில்லாமல் சிதறி கிடந்தது.
இது குறித்து விசாரிக்க துவங்கினோம், தூண்டில் பாலத்திற்கென அமைக்கப்பட்டுள்ள கற்பாலத்தில் குவார்ட்டர் பாட்டில் முதல் ஊசி வரை இருக்கு என தெரிவித்தவர்கள், இது எதற்கான ஊசி என்ன மருந்து என தெரியவில்லை, ஆனாலும் அரசும் காவல்துறையும் கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றனர்.
கண்காணிப்பு அவசியம்:
கள ஆய்வில் அப்பகுதியில் இருந்த ஊசி மருந்துகள் குறித்து விசாரித்த போது அதிர்ந்து போனோம். இது அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் நோயாளிகளுக்கு ஏற்படும் வலியின் தீவிரத்தை குறைக்கும் tramadol injection எனவும் இதில் opid analgesic எனப்படும் அறுவை சிகிச்சைக்கு பின் உபயோகப்படுத்தப்படும் மருந்து எனவும் தெரிவித்த மருத்துவர்கள், இதனை தொடர்ந்து செலுத்துவதால் முற்றிலுமாக மூளை பாதிக்கப்படும் என தெரிவித்ததும் உச்சப்பட்ச அதிர்ச்சியில் உறைந்து போனோம். யார் உபயோகிப்பது, வலிக்கு உபயோகிக்கும் மருந்தை கொடுப்பது யார், கூடுதல் ரோந்தை மட்டுமல்ல கண்காணிப்பையையும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தோர்.