Nellai Crime: என்ன நடக்குது நெல்லையில்? இளைஞரை வெட்டிக் கொன்ற 2 பள்ளி மாணவர்கள்? காரணம் என்ன?
Nellai Crime: நெல்லையில் இளைஞரை வெட்டிக் கொன்ற வழக்கில், இரண்டு பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nellai Crime: நெல்லையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை
நெல்லையில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் கொடூர கொலைகள் கேட்போரை குலை நடுங்கச் செய்து வருகிறது. அந்த வரிசையில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞர் திட்டமிட்டு கொல்லப்பட்டதும், அந்த வழக்கில் இரண்டு பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் காவல்துறை தேடி வருகிறது.
ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற ஆனந்த் (வயது 19), பெற்றோர் இறந்து விட்ட நிலையில் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். சமீபகாலமாக டவுனில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கி இருந்து கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேஷ் தனது நண்பர்கள் சிலருடன் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் உள்ள கடைக்கு டீக்குடிக்க வந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் தன்னை நோக்கி அரிவாளுடன் வருவதை கண்ட வெங்கடேஷ் நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து ஓடிய வெங்கடேசை மட்டும் சுற்றி வளைத்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய கும்பலை, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
பள்ளி மாணவர்கள் கைது
5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டனர். அதில் டவுன் வயல் தெருவை சேர்ந்த இசக்கிராஜா (19) மற்றும் 2 சிறுவர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன.
கொலையில் முடிந்த எதிர்பாராத விபத்து
சில நாட்களுக்கு முன் டவுன் பகுதியில் இசக்கிராஜா தரப்பினரின் மோட்டார் சைக்கிளும், வெங்கடேசின் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி உள்ளன. இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடிக்க, அந்த பகுதி மக்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், இசக்கிராஜா தரப்பினர் அந்த முன்விரோதத்தில் வெங்கடேசின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அந்த வகையில் அவர் நெல்லை சந்திப்பு பகுதிக்கு சென்றதை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கைதான 2 சிறுவர்களும் டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகின்றனர். இசக்கிராஜா பள்ளி படிப்பை முடித்துவிட்டு போட்டி தேர்வுக்காக தனியார் அகாடமியில் படித்து வருகிறார். தலைமறைவாக இருக்கும் இசக்கிராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.





















