Nellai: சிறு குற்றங்களுக்காக வரும் இளைஞர்களின் பற்களை பிடுங்கும் பல்பீர் சிங்..? - ஐபிஎஸ் அதிகாரி மீது புகார்
இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இன்று விசாரணையை இன்று தொடங்கி உள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக்கத்திற்கு உட்பட்டு ஐந்து காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு உதவி காவல்துறை கண்காணிப்பாளராக இருப்பவர் பல்பீர் சிங். இந்த நிலையில் இங்கு குற்ற செயல்கள் மற்றும் விசாரணை கைதிகளாக அழைத்து வரப்படும் குற்றவாளிகளை விசாரணையின்றி அவர்களின் பற்களை பிடுங்குவதாக அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக கணவன் - மனைவி பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, அடிதடி பிரச்சினை, அண்ணன் தம்பி பிரச்சனை, பக்கத்து வீட்டு பிரச்சினை என எந்த பிரச்சினைக்கு காவல் நிலையம் சென்றாலும் அவர்களின் பற்களை பிடுங்கி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சூர்யா என்பவர் அந்த பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்து பிரச்சினை செய்ததன் காரணமாக அவரை காவல் நிலையம் அழைத்து வந்த ஏ எஸ் பி அவரின் பற்களை பிடுங்கி கொடுமையான தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதே போல சுபாஷ், வெங்கடேஷ், சங்கர் என மொத்தம் நால்வரின் பற்களையும் பிடுங்கி கொடுமைப்படுத்தியதோடு 3பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே போல ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி ஐந்து பேரின் பற்களையும் பிடுங்கி கொடுமைப்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டை எழுந்துள்ளது. பற்களை உடைப்பது மட்டுமின்றி ஜல்லி கற்களை அவர்களத் வாயில் போட்டு கொடுமை படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஏஎஸ்பி பல்பீர் சிங்கின் செயலுக்கு கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் என காவல்துறை அதிகாரிகளும் துணை போகிறார்கள் எனவே அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சேனை கட்சியின் தலைவர் மகாராஜா, செய்தியாளர் சந்திப்பில் கூறும் பொழுது, இங்குள்ள இளைஞர்கள் சிறிய தவறுகள் செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை விடுத்து துள்ள துடிக்க பற்களை பிடுங்கி, கற்களை வாயில் போட்டு அடிப்பது என 40 இளைஞர்களுக்கு இது போன்று தண்டனை கொடுத்துள்ளனர். இதனால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தே ஒரு ஐபிஎஸ் அதிகாரி இது போன்று கொடூரமான நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வெளியே சொன்னால் குண்டர் சட்டம் போடுவதாக மிரட்டுவதால் பலர் வெளியே சொல்லாமல் சிகிச்சையில் இருக்கிறார்கள். எனவே பல்பீர் சிங் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். 3 பேரை அழைத்து 30 ஆயிரம் கொடுத்து உள்ளனர் இதனை வெளியே சொல்லக் கூடாது என்பதற்காக. இதற்காக அரசு ஒரு குழு அமைத்து விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார். உரிய நடவடிக்கை இல்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்குவதாக வந்த புகார் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் இன்று விசாரணையை இன்று தொடங்கி உள்ளார். மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சியங்களுக்கு முறையாக சம்மன் அனுப்பி அதன் அடிப்படையில் விசாரணையானது நடைபெறும். விசாரணையின் முடிவுகள் ஆட்சியரிடம் சமர்பிக்கப்படும் எனவும் சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரியில் இச்செயல் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.