வேளாங்கண்ணியில் கனமழை: ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கும் சாகசப் பிரியர்கள்! அதிர்ச்சி தரும் காட்சிகள்!
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கனமழை எச்சரிக்கையையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமலும் ஆபத்தான முறையில் பலர் கடலில் குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் வார விடுமுறையான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இருப்பினும், கனமழை எச்சரிக்கையையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சிலர் ஆபத்தை உணராமல் கடலில் குளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரை சுற்றுலாத் தலமான வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி பேராலயம், உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் புனிதத் தலமாக மட்டுமின்றி, அழகிய கடற்கரையுடன் கூடிய ஒரு முக்கிய சுற்றுலா மையமாகவும் விளங்குகிறது. பொதுவாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் வேளாங்கண்ணி களைகட்டும். பேராலயம், கடைகள், கடற்கரை என எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
கனமழை எச்சரிக்கையால் வெறிச்சோடிய பகுதிகள்
தற்பொழுது வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதி கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பயணச் சிரமங்களைத் தவிர்க்கவும் வெளி மாவட்டங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்று வெகுவாகக் குறைந்துள்ளது.
சாதாரண வார விடுமுறை நாட்களுடன் ஒப்பிடுகையில், பேராலய வளாகம், முக்கிய வீதிகள் மற்றும் கடைவீதிப் பகுதிகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் வியாபாரம் இன்றி வெறிச்சோடியது.
ஆபத்தை அறியாமல் கடலில் குளிக்கும் சாகசப் பிரியர்கள்
பேராலயம் மற்றும் பிற பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்திருந்தாலும், கடற்கரைப் பகுதியில் ஓரளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. கனமழையால் நிலவும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கவும், இயற்கையின் சீற்றத்தைப் பார்க்கவும் பலர் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
மழை மற்றும் கடல் சீற்றத்தை உணராமல், சிலர் தடையை மீறி கடலில் குதித்துக் குளித்து வருகின்றனர். ஆழமான கடலில் இறங்க வேண்டாம் எனப் பாதுகாப்புப் பணியில் இருப்பவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும், அதைப் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் சிலர் சாகச உணர்வுடன் கடலில் குளிப்பது, அங்கிருந்த பிற சுற்றுலாப் பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடலில் குளிப்பதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
மழையில் நனைந்தபடி குழுப் புகைப்படம்
மறுபுறம், மழையால் நிலவும் இதமான மற்றும் குளிர்ந்த சூழலை ரசிக்க வந்த பெரும்பாலான மக்கள், கடற்கரையில் அமர்ந்து கடலின் இயற்கை அழகை ரசித்தனர். குழந்தைகளோடு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த குடும்பத்தினரும் அதிகளவில் காணப்பட்டனர்.
தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்த வெளி மாவட்டச் சுற்றுலாப் பயணிகள், மழையில் நனைந்தபடி உற்சாகமாகக் குழுப் புகைப்படங்கள் எடுத்தும், 'செல்பி' எடுத்தும் இந்தக் குளிர்ச்சியான அனுபவத்தைப் பதிவு செய்து மகிழ்ந்தனர்.
மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் தேவை
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, பேராலயம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர், ஆபத்தை உணராமல் கடலில் குளிப்பவர்களைக் கண்காணித்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க, கடற்கரைப் பகுதியில் கூடுதல் எச்சரிக்கைப் பலகைகளையும், கண்காணிப்புப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனசமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.






















