பரபரப்பில் மயிலாடுதுறை - தருமபுரம் ஆதீனத்தில் ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திடீர் திருப்பம்
ஆதீனத்தில் ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் கொலை முயற்சி செய்தார் என்று புகார் அளிக்கப்பட்டு இருந்த ஆதீன மடாதிபதி உதவியாளர் எந்த தவறும் செய்யவில்லை என்று மடத்தின் சார்பில் கடிதம் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமையான சைவ ஆதீன திருமடத்தின் 27 ஆவது மடாதிபதி குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் இளைய சகோதரர் விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன்பேரில் விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் புகாரின் சாராம்சம்:
அவர் அளித்த புகாரில் ஆடுதுறையை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் வினோத், திருவெண்காடு சம்பாகட்டளையை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் 33 வயதான விக்கி என்கிற விக்னேஸ்வரன், திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர், நெய்க்குப்பை, மெயின்ரோட்டை சேர்ந்த ராமலிங்கம் மகன் 28 வயதான ஸ்ரீநிவாஸ், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் பள்ளியின் நிறுவனர் நெடுஞ்செழியன் மகன் 39 வயதான குடியரசு, திருவெண்காடு இளையமதுகூடத்தை சேர்ந்த பிஜேபி கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், செய்யூரை சேர்ந்த வழக்கறிஞர் ஜெயசந்திரன், தருமபுரம் ஆதீனத்தில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்த திருச்சியை சேர்ந்த பிரபாகரன், தருமபுரம் ஆதீனத்தில் சேவகராக பணிபுரியும் செந்தில், திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் திருக்கடையூர் விஜயகுமார் ஆகியோர் தன்னிடம் பலமுறை மிரட்டி பணம் கேட்டதாகவும், கொடுக்கவில்லை என்றால் வீடியோவை வலைதளத்தில் பரப்புவதாகவும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் கழுத்தை நெரித்து கொலை செய்வதாக மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
வழக்குப் பதிவு
விருதகிரி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 323, 307, 389, 506(2), 120B உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ், குடியரசு ஆகிய நான்கு பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், தருமபுர ஆதீனத்தின் சேவகர் செந்தில், ஆதீன போட்டோகிராபர் பிரபாகர், வழக்கறிஞர் ஜெயசந்திரன், ஆகியோரை தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
திடீர் திருப்பம்
இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக புகார் அளித்த விருத்தகிரி காவல்துறைக்கு அனுப்பி இருந்த இரண்டு கடிதங்களில் திருக்கடையூர் விஜயகுமார், ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் ஆகிய இருவருக்கும் மிரட்டல் சம்பவத்தில் தொடர்பில்லை என்றும், மடத்திற்கு ஆதரவாக திருக்கடையூர் விஜயகுமார் சுமூக உடன்பாடு செய்விக்க முயன்று தோல்வியடைந்ததால், காவல்துறை உதவியை நாடலாம் என்ற ஆலோசனையை விஜயகுமார் வழங்கினார். மடத்திற்கு ஆதரவாக தான் அவர் செயல்பட்டார் அவருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்றும், செந்தில் பெயர் பதட்டத்தில் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விருத்தகிரி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை விளக்கம்
இந்த கடிதங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இதன் உண்மைத்தன்மையை அறிய காவல்துறையை அணுகியபோது எந்த விளக்கமும் கிடைக்காத நிலையில், இரவு நேரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மடத்தின் சார்பில் இரண்டு பேர் மறுப்பு கடிதங்களை அளிக்க காத்திருந்தனர். 4-ம் தேதி முதல்வர் மயிலாடுதுறை வருகை புரிவதை முன்னிட்டு காவல்துறை கண்காணிப்பாளர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி காவல்துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் ஆதீனம் சார்பில் அளிக்கப்பட்ட மறுப்பு கடிதங்களை பெற்றுக் கொள்ளவில்லை.
தொடர்ந்து இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருப்பதி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார். 25ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரில் கொலை செய்ய முயற்சி செய்த நபர் இன்று மடாதிபதியின் உதவியாளர் செந்தில் பெயரை குறிப்பிட்டுள்ள புகார்தாரர் விருத்தகிரி பதட்டத்தில் தவறாக உதவியாளர் பெயரை சேர்த்து விட்டேன் என்று மறுப்பு தெரிவித்து கடிதம் அளித்து இருப்பது இந்த வழக்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.