Crime: கொடூரம்! சட்டக்கல்லூரி வளாகத்திலே மாணவர் படுகொலை - முன் விரோதத்தால் வெறிச்செயல்
Crime: பாட்னாவில் உள்ள சட்டக்கல்லூரி கல்லூரி வளாகத்தில் 22 வயது மாணவர் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பாட்னாவில் உள்ள சட்டக் கல்லூரி வளாகத்தில் 22 வயது மாணவர் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, முக்கிய குற்றவாளியை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் கடந்தாண்டு டாண்டியா இரவில் நடந்த தகராறுக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
சட்டக்கல்லூரி மாணவர் கொலை:
பாட்னாவில் உள்ள பிஎன் கல்லூரியில் தொழிற்கல்வி ஆங்கிலத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஹர்ஷ் ராஜ், நேற்று அதாவது மே 27ம் தேதி சுல்தாங்கஞ்ச் சட்டக் கல்லூரியில் தேர்வெழுத வந்தபோது, முகமூடி அணிந்த 10 முதல் 15 நபர்கள் அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு கடும் ரத்தகசிவு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், “சட்டக்கல்லூரி வளாகத்தில் சில சமூகவிரோதிகள் மாணவர் ஹர்ஷ் ராஜ் என்பவரை மிக மோசமாக தாக்கினர். இதன் காரணமாக ஹர்ஷ் ராஜ் இறந்துவிட்டார். இந்த கொலை தொடர்பான விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தோம். இதன்மூலம், இந்த கொலையை திட்டமிட்ட முக்கிய குற்றவாளியான சந்தன் யாதவை கைது செய்துள்ளோம். மற்ற குற்றவாளிகளை பிடிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த ஆண்டு தசரா விழாவின் போது நடந்த டாண்டியா நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
VIDEO | Students of Patna Law College stage protest over murder of student Harsh Raj.
— Press Trust of India (@PTI_News) May 28, 2024
A final year undergraduate student, Harsh Raj of Patna Law College, was brutally murdered at campus on Monday.
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/uFU6YbZxkB
சி.சி.டி.வி. காட்சி ரிலீஸ்:
மேலும், கல்லூரி வளாகத்தில் இருந்து அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி., காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோவில் முகமூடி அணிந்த குற்றவாளிகள் கொலை செய்யப்பட்ட ஹர்ஷ் ராஜை பலமுறை தாங்கள் கொண்டுவந்த ஆயுதங்களில் தாக்கியது பதிவாகியுள்ளது. காவல் துறையினர் குற்றவாளிகளை அடையாளம் காண வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியினர் காவல்துறை விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துயரமான நேரத்தில் கொல்லப்பட்ட மாணவர் ஹர்ஷ் ராஜின் குடும்பத்துடன் அரசு துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது.
சட்டம், ஒழுங்கு:
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கல்வி நிர்வாகத்தின் மீது ஆளும் அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்" எனக் கூறினார்.