Crime: க்ரைம் சீரிஸ்தான் ஹெல்ப் பண்ணுச்சு.. படம் பார்த்து முன்னாள் காதலியின் கணவனை கொன்ற கொடூரம்..
வெப் சீரிஸ்கள், ஹாலிவுட் படங்கள் பார்த்து கொலை செய்யத் திட்டம் தீட்டியதாகவும், இதற்காக துப்பாக்கி ஒன்றை கள்ளச்சந்தையில் வாங்கியதாகவும், ஸ்போர்ட்ஸ் பைக்கை திருடியதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
முன்னாள் காதலியுடனான உறவைப் புதுப்பிக்க அவரது இந்நாள் கணவனை வெப் சீரிஸ், படங்கள் பார்த்து திட்டமிட்டு காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடையாக இருந்த கணவன் கொலை
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், கராடியைச் சேர்ந்த அக்ஷய் பிரகாஷ் பிஸே துப்புரவு வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது மனைவி திருமணத்துக்கு முன் கொலையாளி சத்தியவான் ஷிண்டேவை காதலித்து வந்ததாகவும், திருமணத்துக்குப் பின் சத்தியவானுடனான உறவை முறித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சத்தியவான் முன்னதாக தன் காதலுக்கு இடையூறாக இருந்த முன்னாள் காதலியின் கணவன் அக்ஷய் பிரகாஷைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தன் கூட்டாளி பாபு பாம்னே என்பவருடன் இணைந்து திட்டமிட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி அக்ஷய் பிரகாஷை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
சிசிடிவி காட்சி
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், முன்னதாக இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் கொலையாளி சுட்டுக்கொலை செய்துவிட்டு விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கைக் கொண்டு தப்பிச் சென்றது தெரிய வந்த நிலையில், பைக்கை வைத்து கொலையாளி கர்நாடகாவில் இருப்பதைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து கர்நாடகாவின் பைடர் மாவட்டத்தில் வைத்து சத்தியவானைக் கைது செய்தனர். அவருடன் கொலையில் ஈடுபட்ட பாபு சோலாபூர் மாவட்டத்தில் ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார்.
வெப் சீரிஸ், ஹாலிவுட் படம் பார்த்து திட்டம்
இருவரும் இணைந்து அக்ஷய் பிரகாஷை கொலை செய்ய் முடிவெடுத்ததை அடுத்து பல வெப் சீரிஸ்கள், ஹாலிவுட் படங்கள் பார்த்து கொலை செய்ய்த் திட்டம் தீட்டியதாகவும், இதற்காக துப்பாக்கி ஒன்றை கள்ளச்சந்தையில் வாங்கியதாகவும், ஸ்போர்ட்ஸ் பைக்கை திருடியதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
இருவரும் கர்நாடகாவிலிருந்து புனே சென்று அக்ஷய் பிரகாஷை கொலை செய்துவிட்டு மீண்டும் பைக்கிலேயே கர்நாடகா திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டு முன்னதாக புனே காவல் துறையினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேற்படி விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்றொரு சம்பவம்
முன்னதாக நாகப்பட்டினத்தில் இதேபோல் மனைவியுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த நபரை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேளாங்கண்ணியைச் சேர்ந்த வினோத் விக்டர், வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். வினோத் விக்டருக்கு கடந்த ஆண்டு வெளிநாட்டில் மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை கிடைத்ததால், திமுக பிரமுகர் மதன் கார்த்திக் என்பவருக்கு விடுதியை லீசுக்கு கொடுத்துவிட்டுச் சென்றார்.
மதன் கார்த்தியை விக்டரின் மனைவி மரிய ரூபினாதான் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தநிலையில், விக்டர் வெளிநாடு சென்றதும் ரூபினாவும் மதன் கார்த்திக்கும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதனை கவனித்து வந்த விக்டரின் நெருக்கமானவர்கள் இதுகுறித்து அவரிடம் தெரிவித்த நிலையில், சந்தேகமடைந்த விக்டர் மனைவிக்கு தெரியாமல் வீட்டில் ஒளித்து வைத்திருந்த கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.
உயிர் தப்பிக்க கொலை
அதில், மதன் கார்த்திக் அடிக்கடி மனைவியை பார்க்க வந்து செல்வதும், தனது மனைவியுடன் நெருக்கமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த விக்டர் மதன் கார்த்திக்கிடம் இருந்து விடுதியை மீட்க வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார். அப்போது, விடுதியை தர மறுத்தி மதன் கார்த்திக் விக்டரை கடுமையாகத் தாக்கியுள்ளார். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த விக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அவரது மனைவி ரூபினாவும் அவருக்கு ஆதரவாக மீண்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில் விக்டரும் ரூபினாவும் தங்களது விடுதிக்கு மீண்டும் சென்றபோது அடியாட்களுடன் நின்றிருந்த மதன் கார்த்திக் விக்டரின் காரை சேதப்படுத்த முயற்சித்துள்ளனர். இதனால் பயந்துபோன கார் ஓட்டுநர் இறங்கிய நிலையில், விக்டர் காரை இயக்கி தப்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் பைக்கில் துரத்தி சென்றுள்ளது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று விக்டரின் காரை மதன் கார்த்தியும் கூட்டாளியும் மடக்கியுள்ளனர். அப்போது உயிரை காப்பாற்றிக்கொள்ள வந்த வேகத்தில் அவர்கள் மீது விக்டர் காரை ஏற்றி விட்டு தப்பியுள்ளார். இதில் படுகாயமடைந்த மதன் கார்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.