கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்.. குற்ற உணர்ச்சியால் தற்கொலை
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர், உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரும் திட்டித் தீர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர், உற்றார், உறவினர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரும் திட்டித் தீர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ரெட்டேரியைச் சேர்ந்தவர் பாபு. இவருக்கு 27 வயதாகிறது. இவருக்கும் எல்லம்மாள் என்ற மனைவி இருக்கிறார். மனைவி எல்லம்மாள் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னதாக, எல்லம்மாளுக்கும், பாபுவுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரத்தில் பாபு மனைவி எல்லம்மாளின் மனைவி வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
இதில் எல்லம்மாள் வலியில் துடிதுடித்து உருண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டார் ஓடிவந்து அந்தப் பெண்ணை மீட்டு ராயபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு பாபுவை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவருமே வசை பாடியுள்ளனர். தன் தவற்றை உணர்ந்த பாபு, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். கூடவே, குற்ற உணர்ச்சி மேலோங்க தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை தீர்வு அல்ல:
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வு அல்ல. அது பிரச்சினையில் தப்பிக்க முயலும் குறுக்குவழி. ஆனால் அந்த வழி எந்தத் தீர்வுக்கும் இட்டுச் செல்லாது மாறாக தற்கொலை செய்தோரைச் சார்ந்தோரை நீங்காத் துயரில் ஆழ்த்தும்.
இதனால் தற்கொலை எண்ணம் மேலோங்கும் போது உங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவர்களிடம் பேசுங்கள். இல்லாவிட்டால் 104 என்ற அரசாங்கத்தின் இலவச ஆலோசனை எண்ணைத் தொடர்பு கொண்டு பேசலாம். தற்கொலை செய்து கொள்பவர்களைத் தடுத்து நிறுத்த பல்வேறு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் இயங்கும், ஸ்னேஹா தற்கொலை தடுப்பு உதவி மையத்தை (044-2464 0050) கூட நீங்கள் நாடலாம். இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது அரசாங்க அறிக்கை.
சமூகத்துக்கு பொறுப்பு இருக்கிறது:
இங்கே நடைபெறும் பல்வேறு தற்கொலைகளுக்கும் சமூக அழுத்தம் ஒரு காரணமாக இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இளம் பெண்கள் தற்கொலை, சமூகம் தன்னைப் பற்றி என்ன பேசுமோ என்பதனாலேயே நடக்கிறது. அதேபோல் மாணவர்களின் தற்கொலை பெற்றோர், சமூகம் தரும் அழுத்தத்தாலேயே நடக்கின்றன. இங்கே பாபுவின் தற்கொலையும் அப்படியொரு அழுத்தத்தில் தான் நடந்துள்ளது.
பாபுவை குற்றவாளி போல் அனைவருமே குத்திக்காட்டிப் பேசவே அவர் தற்கொலை வரை சென்றுள்ளார். அவர் செய்தது தவறு. அந்தத் தவறை சுட்டிக் காட்டி, அவரை உணர வைத்து, முடிந்தால் காவல்துறை மூலம் எச்சரிக்கை விடுத்து நல்வழிப் படுத்தியிருக்கலாம். அதைவிடுத்து அவரை குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்தது தான் அவரது தற்கொலைக்கு முக்கிய காரணம்.