Crime: மனைவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்... காரணம் என்ன?
இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புறநகர் மும்பையில் மனைவியை கத்தியால் குத்திய விட்டு கணவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை புறநகர் பகுதியில் உள்ள கிழக்கு முலுண்ட் பகுதியில் வசித்து வந்தவர் சிவன் (வயது 64) இவரது மனைவி கவிதா (வயது 54). இவர்களுக்கு தன்யா எனும் மகள் உள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 6ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தன்யா வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது ,இவர்களது வீட்டுக் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து காலிங் பென் அடித்தும் தன் அம்மாவை பலமுறை கைபேசியில் அழைத்தும் தன்யா தொடர்பு கொண்டுள்ளார்.
வீட்டின் உள்ளே போன் அடிக்கும் சத்தம் கேட்டும், காலிங் பெல் ஒலி கேட்டும் கதவு திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த தன்யா அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கதவை உடைத்துத் திறந்தபோது, தன்யாவின் தாய் கவிதா ரத்த வெள்ளத்தில், உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து தன்யா தன் தந்தையைத் தேடியபோது, படுக்கையறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து திறந்தபோது, தன்யாவின் தந்தை சிவன் அறையின் மின்விசிறியில் தூக்கிட்டுக்கொண்டதைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.
தொடர்ந்து இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து உயிருக்குப் போராடி வரும் கவிதா அங்கிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கவிதா ஆபத்தான நிலையில் ஐசியுவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் மகள் தன்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது தந்தை சிவன் மனநலம் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மறுவாழ்வு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்கொலை செய்து உயிரிழந்த சிவன் மீது ஐபிசி பிரிவு 307இன் (கொலை முயற்சி) கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல:
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)