பெண் தேடியவரிடம் மணமகள் குரலில் பேசி 21 லட்சம் சுருட்டிய நபர் கைது!
சேலம், சின்ன திருப்பதியைச் சேர்ந்த மோசடி நபரைக் கைது செய்து சென்னை அழைத்து வந்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் செய்ய பெண் தேடி வந்த நபரிடம் மணப்பெண் போல் பேசி 21 லட்ச ரூபாயை அபகரித்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை, புழுதிவாக்கம், பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த ரகுராம் (வயது 39) என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் முன்னதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் “எனது தந்தை எனக்கு பெண் பார்த்து வந்த நிலையில், இதுதொடர்பாக அவர் ஆன்லைன் வாயிலாக விளம்பரப்படுத்தி இருந்தார். இந்த விளம்பரங்களைப் பார்த்து விட்டு சேலத்தில் இருந்து கல்யாணராமன் என்பவர் எனது தந்தையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி எனது புகைப்படம், என்னைப் பற்றிய இதர தகவல்களை கேட்டுப் பெற்றார்.
தொடர்ந்து தனது அண்ணன் மகள் ஐஸ்வர்யாவுக்கு என்னைப் பிடித்து இருப்பதாகவும், திருமணம் செய்து கொடுக்க சம்மதம் என்றும் கூறி கல்யாணராமன் தகவல் அனுப்பினார். அதனையடுத்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. மணப்பெண் என்று கூறப்பட்ட ஐஸ்வர்யா என்னுடன் அடிக்கடி செல்போனில் ஆசையாக பேசுவார். நானும் அவர் பேசியதை உண்மை என்று நம்பினேன். அவரது புகைப்படம் என்று அழகான பெண் ஒருவரின் புகைப்படமும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த மே மாதம் ஐஸ்வர்யா சோகமான குரலில் பேசத் தொடங்கிய ஐஸ்வர்யா தனது தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை என்றார். தனது தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பண உதவி வேண்டும் என்றும் என்னிடம் கேட்டார். எனது வருங்கால மனைவி என்ற எண்ணத்தில் பண உதவி செய்து வந்தேன். கொஞ்சம், கொஞ்சமாக ரூ.21 லட்சம் வரை வாங்கி விட்டார்.
அதன்பிறகு ஐஸ்வர்யா என்னுடன் பேசுவதை நிறுத்திய நிலையில், திடீரென்று கல்யாணராமன் பேச ஆரம்பித்தார். திருமணம் பற்றி கேட்டபோது, பல காரணங்களை சொல்லி தட்டிக் கழித்தார். ”ஐஸ்வர்யாவை பேசச்சொல்லுங்கள்” என்று கேட்டால், ”ஐஸ்வர்யா இனி பேசமாட்டாள், நான் தான் பேசுவேன்” என்றார். ஒரு கட்டத்தில் ”ஐஸ்வர்யாவுக்கு உங்களை பிடிக்கவில்லை” என்று பெரிய குண்டை தூக்கி போட்டார்.
அதன்பிறகு கல்யாணராமன் ஒரு மோசடி பேர்வழி என்றும், தன் அண்ணன் மகளை திருமணம் செய்து தருவதாகவும், மணமகள் பெயர் ஐஸ்வர்யா என்றும் கூறி கபட நாடகமாடியதும் தெரிய வந்தது. ஐஸ்வர்யா போல பெண் குரலில் அவரே பேசி தாயாருக்கு உடல் நலமில்லை என்றும் பொய் சொல்லி ரூ.21 லட்சம் சுருட்டியதும் எனக்குத் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ரூ.21 லட்சம் பணத்தை நான் திருப்பிக் கேட்டபோது பணத்தை தரமுடியாது என்று என்னை மிரட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் என்னை மிரட்டி வருகிறார். இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு ரூ.21 லட்சம் பணத்தை மீட்டு தரவேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
ரகுராமின் இந்தப் புகாரை அடுத்து நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தத் தொடங்கினர். அந்த விசாரணையில் மோசடி நபரின் கல்யாணராமன் என்ற பெயரும் போலியானது என்பது தெரியவந்தது.
மணமகள் குரலில் பேசி மோசடி செய்த நபரின் பெயர் தாத்தாதிரி (49) என்பதும், அவர் சேலம், சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பட்டதாரியான தாத்தாகிரி மருத்துவப் பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த நிலையில், அவரை நுங்கம்பாக்கம் காவல் துறையினர் நேற்று (டிச.06) சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
தொடர்ந்து சென்னைக்கு அழைத்துவரப்பட்டு தாத்தாகிரியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரகுராமிடம் மோசடி செய்த பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று விட்டதாக காவல் துறையினரிடம் தாத்தாகிரி தெரிவித்தார். இந்நிலையில் தாத்தாகிரி உண்மையை தான் பேசுகிறாரா என்றும், இதேபோல் பெண் குரலில் பேசி வேறு எவரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.