Crime: சேலத்தை அதிரவைத்த கொள்ளை சம்பவம்.. முக்கிய குற்றவாளி கைது.. நகைகள், இருசக்கர வாகனம் மீட்பு
கொள்ளையர் கார்த்தி மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் மற்றும் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே உள்ள பில்லுக்குறிச்சி கிராமம் ஆசாரிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சிவகாமி தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி அன்று கோவிந்தராஜன் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில், கோவிந்தராஜ் தனது மனைவி சிவகாமியுடன் மேச்சேரி பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்றிருந்தார். மாலை வீடு திரும்பிய கோவிந்தராஜ் வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்நிலையில் கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பூலாம்பட்டி காவல்துறையினர், சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
குற்றம் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
காவல்துறையினரின் தீவிர தேடுதலில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை காவல்துறையினர், அப்பகுதியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த சம்பந்தப்பட்ட கொள்ளையன் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில், அவரை பின்தொடர்ந்த காவல்துறையினர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் சம்பந்தப்பட்ட கொள்ளையனை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிடிபட்ட நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பன்னத்தூர் கிராமம், பட்டாளத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன் என்பதும், இவர் தனது நண்பரான திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பதுடன் சேர்ந்து, பூலாம்பட்டி அடுத்த பில்லுக்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன் வீட்டின் பூட்டை உடைத்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் கொள்ளையர் கார்த்திக் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே வேறொரு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேலுக்கும் தனக்கும் நட்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்து புதிதாக பெரிய அளவில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு, கொள்ளை அடிப்பதற்கு முன் பழனி கோவிலுக்கு சென்ற அவர்கள் இருவரும் அங்கு ஒரு நாள் தங்கி இருந்து, பின்னர் ஈரோடு திரும்பி உள்ளனர்.
ஈரோட்டில் ஒரு இருசக்கர வாகனத்தை திருடிய அவர்கள் அங்கிருந்து மேட்டூர் வரும் வழியில், பில்லுக்குறிச்சி பகுதியில் பூட்டி இருந்த விவசாயி கோவிந்தராஜன் வீட்டை கண்டவுடன், அருகில் இருந்தவர்களிடம் விவசாயி கோவிந்தராஜ் வீட்டின் முன் இருந்த டிராக்டரை காண்பித்து, தாங்கள் டிராக்டர் வாடகைக்கு எடுக்க வந்திருப்பதாகவும், இதன் உரிமையாளர் எங்கே சென்றுள்ளார் என அருகில் இருந்தவர்களிடம் விசாரித்து தெரிந்து கொண்டவர்கள், டிராக்டரை சுற்றி பார்ப்பதுபோல் பார்த்து, நைசாக வீட்டின் பூட்டை உடைத்து அங்கு பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற விவரம் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் கொள்ளையடித்த நகைகளை பிரித்துக் கொண்டு, தனித்தனியே தலைமறைவாக இருந்தபோது காவல்துறையினர் தம்மை சுற்றி வைத்து கைது செய்ததாக கொள்ளையர் கார்த்தி கூறியுள்ளார்.
கொள்ளை சம்பவம் ஈடுபட்ட கொள்ளையர் கார்த்தி மீது ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் மற்றும் காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 7 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் தண்டனை பெற்று சிறை சென்றவர் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கரவாகனத்தை மீட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள நகைகளுடன் தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையன் சக்திவேலை தேடிவருகின்றனர்.