Maharashtra Robbers: பெட்ரோல் நிலைய ஊழியர்களை கத்தியால் தாக்கி பணம் பறித்த மர்ம கும்பல்...அதிர்ச்சிக்குள்ளாக்கும் சிசிடிவி காட்சிகள்
மகாராஷ்டிராவில் கத்தியால், பெட்ரோல் நிலைய ஊழியர்களை தாக்கி பணம் பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் உள்ள போர் என்ற இடத்தில் பெட்ரோல் நிலையம் செயல்பட்டு வருகிறது. பெட்ரோல் நிலையத்தில் உள்ள அலுவலக அறையில், ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆயுதங்களுடன் மர்ம கும்பல்:
அப்போது, அந்த பகுதிக்கு, முகக்கவசத்துடன் 4 பேருக்கு மேற்பட்ட கும்பல் ஒன்று கத்தி மற்றும் ஆயுதங்களுடன் அலுவலக அறைக்குள் புகுந்தனர்.இதை பார்த்த ஊழியர்கள், அதிர்ச்சியடைந்து எழுந்து நின்றனர்.
உடனே, மர்ம கும்பலானது, ஊழியர்களை கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பின்னர், அங்கிருந்த ஊழியர், மர்ம கும்பலை தாக்க முயன்றார். ஆனால், ஆயுதங்கள் வைத்திருந்த மர்ம கும்பல் எதிர் தாக்குதல் தாக்கினர். அதையடுத்து, அங்கிருக்கும் பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த உள் அறையில், சுற்றி பார்த்தனர்.
பின் அங்கிருந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் சென்றனர். இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அதில், கருப்பு முக கவசம் அணிந்த மர்ம கும்பல் திடீரென வந்து, ஊழியர்களை தாக்கி விட்டு பணம் பறித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், குற்றவாளிகள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தை கொள்ளை அடித்து சென்றதாகவும், மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















