கரூர்: கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி: அடுத்தடுத்து 3 பேர் பலி
கரூரில் கழிவுநீர் தொட்டியில் சென்ட்ரிங் பிரிக்க இறங்கிய 2 கட்டிட தொழிலாளர்கள் மற்றும் காப்பாற்ற சென்ற மற்றொரு தொழிலாளி என 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
கரூர் அடுத்த சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவரின் புதிய வீடு ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட அந்த கழிவுநீர் தொட்டியில் இறங்கி கான்கிரீட் சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக அந்த தொட்டியில் மோகன்ராஜ் மற்றும் ராஜேஷ் என்ற தொழிலாளர்கள் இறங்கி உள்ளனர்.
அப்போது இருவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் உள்ள கட்டிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிவகுமார் என்ற மற்றொரு கட்டிட தொழிலாளி உள்ளே இறங்கி உள்ளார். இதில் மூன்று பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூன்று பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
சம்பவம் இடத்திற்கு வந்த கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கட்டிட உரிமையாளர் மற்றும் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் எட்டடி உயரம் கொண்ட தொட்டியில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்ததாகவும் சவுக்கு குச்சிகள் உப்பி தேங்கிய நீரில் விஷ வாயு உருவாகி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கரூரில் கட்டிட தொழிலாளர்கள் பணியின்போது விஷவாயு தாக்கு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரூபினா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் தொடர்பாக கரூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் விபத்து நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கட்டிட பணிகள் எப்போது துவங்கியது.
மேலும் தற்போது நடந்துள்ள விபத்து பற்றிய முழு விவரங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து தகவல் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கரூரில் விசவாய்வு தாக்கி மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.