கரூர் : தாயும், கல்லூரி மாணவியும் விஷமருந்தி தற்கொலை முயற்சி.. மகள் உயிரிழப்பு.. தாய் கவலைக்கிடம்..
தீபாவும், சிவகாமியும் நேற்று கருப்பகவுண்டன்புதூரிலுள்ள தோட்டத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்களாம்.

கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பகுதியில் தாயுடன், விஷம் குடித்த கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவரது தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றிய விபரம் பின்வருமாறு.

கரூர் மாவட்டம், கத்தாளபட்டி அருகே உள்ள கருப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). கொசுவலை கம்பெனியில் மெக்கானிக் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவகாமி (வயது 45). கொசுவலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மகள் தீபா (வயது 20). கரூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர்கள் அனைவரும் தற்போது கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார்கள்.
கல்லூரி மாணவி தீபாவும், அவரது தாய் சிவகாமியும் நேற்று கருப்பகவுண்டன்புதூரிலுள்ள தோட்டத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்கள். அங்கு தோட்டத்து வீட்டில் கல்லூரி மாணவி தீபாவும், தாய் சிவகாமியும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தனர். இதனை கண்ட முருகேசனின் தாய், பேத்தியும் மருமகளும் மயங்கி கிடந்தது பற்றி தனது மகன் முருகேசனுக்கு தெரிவித்தார்.

முருகேசன் விரைந்து வந்து தனது மகளையும், மனைவியையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தீபா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சிவகாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050





















