போதைக்கு அடிமையான போதை ஒழிப்பு மைய மேலாளர்; தூக்கிட்ட மனைவி; பார்த்து கதறிய மகன்!
மாலதி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை நான்கு வயது மகன் பார்த்து கதறி அழுதுள்ளார். அருகில் இருந்தும் மது போதையில் இருந்ததால் கணவர் தனசேகரன் எதையும் அறிய முடியாதவராய், அங்கேயே போதையில் கிடந்துள்ளார்.

கரூர் மாவட்டம், மாயனூர் காலனியை சேர்ந்தவர் மாலதி. இவர் பெரம்பலூர் மாவட்டம் பாலக்கோடு சேர்ந்த தனசேகரன் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ளார். மூவரும் மாயனூர் மாலதியின் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பின்னர் தனசேகருக்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள போதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக வாய்ப்பு வந்த நிலையில் அங்கு சென்று தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் மாலதி தனது தாய் தமிழரசி மற்றும் மகனுடன் மாயனூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். கணவர் வேலைக்கு சென்று வாரத்திற்கு ஒரு முறை மனைவியை பார்க்க மாயனூர் பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் மது போதை ஒழிப்பு மையத்தில் பணியாற்றிய அவரே நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நல்ல வருமானம் கிடைத்ததால் நாள்தோறும் மதுக்குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் தனசேகரன்.
வாரம்தோறும் தனது மனைவியை மகனை பார்க்க வரும்போதும் குடித்து விட்டு வருவதை வழக்கப்படுத்தினர். நேற்றும், வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது மாலதி மற்றும் தனசேகரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் மதுவில் மூழ்கிய தனசேகரன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

அடிக்கடி சண்டை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்த மாலதி இனி அவருடன் வாழ முடியாது என முடிவு செய்து வீட்டில் படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் சுடிதார் துணியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதனை நான்கு வயது சிறுவன் பார்த்து கதறி அழுத நிலையில், மது போதையில் இருந்த தனசேகரன் எதையும் அறிய முடியாதவராய், அங்கேயே போதையில் கிடந்துள்ளார். நீண்ட நேரம் குழந்தை அழுதுகொண்டே இருந்த நிலையில், சிறிது நேரம் கழித்து கண்விழித்து பார்த்த தனசேகரன், தன் மனைவி தூக்கில் பிணமாய் தொங்குவதை கண்ட அவர், துணியை அவிழ்த்து சடலத்தை கீழே கிடத்திவிட்டு, அதன் அருகிலேயே அவரும் போதையில் உறங்கியுள்ளார்.

அவர்களது நான்கு வயது மகன், இருவரையும் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் அழுதபடி அருகில் உள்ளவர்களிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். அனைவரும் வந்து அங்கு பார்த்த போது மாலதி இறந்தது தெரியவந்தது. மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாலதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போதை தெளிந்த பின் தனசேகரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த நிலையில், தந்தையும் விசாரணை வளையத்தில் இருப்பதால் நான்கு வயது மகன் யாருமின்றி தவித்து வருகிறார்.





















