Crime: 'போட்டோவை உடனே அனுப்ப மாட்டியா?' வாலிபருக்கு நெஞ்சிலே கத்திக்குத்து - நடந்தது என்ன?
பெங்களூரில் கேமராவில் எடுத்த புகைப்படத்தை உடனே பரிமாறச் சொல்லி, 18 வயது இளைஞருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Crime: 'போட்டோவை உடனே அனுப்ப மாட்டியா?' வாலிபருக்கு நெஞ்சிலே கத்திக்குத்து - நடந்தது என்ன? Karnataka Shocker 18-Year-Old Youth Stabbed to Death on Deepavali Near Bengaluru After Fight Over Transfer of Photos Crime: 'போட்டோவை உடனே அனுப்ப மாட்டியா?' வாலிபருக்கு நெஞ்சிலே கத்திக்குத்து - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/13/a7efaaf9cde91a658ca5a0de9a0e96f91699868872293102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினர். அவ்வாறு பெங்களூரில் புகைப்படம் எடுத்து தீபாவளி கொண்டாடிய தருணத்தில் இளைஞருக்கு நிகழ்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படம் கேட்ட கும்பல்:
பெங்களூரில் அமைந்துள்ளது டூடபல்லபுரா. இங்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாப்பிடுவதற்காக தாபா ஒன்று அமைந்துள்ளது. இந்த தாபாவின் வெளியே அமைந்துள்ள சுற்றுச்சுவரானது மிகவும் ரம்மியாக பார்ப்பதற்கே மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக, இந்த இடத்தில் நின்று புகைப்படம் எடுப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள்.
அவ்வாறு நேற்று தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அப்பகுதியில் வசித்து வரும் 18 வயதான இளைஞர் சூர்யா என்பவர் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் அந்த தாபாவின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுடைய கேமரா மூலமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கே ஒரு கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல் தங்களையும் புகைப்படம் எடுத்து தருமாறு கேட்டுள்ளது.
கத்திக்குத்து:
முதலில் சூர்யாவும் அவர்களது நண்பர்களும் புகைப்படம் எடுக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஆனாலும், அந்த கும்பல் தொடர்ந்து வற்புறுத்தியதால் சூர்யாவும், அவர்களது நண்பர்களும் புகைப்படம் எடுத்து தந்தனர். பின்னர், அந்த கும்பல் தங்களுடைய புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்புமாறு கேட்டுள்ளனர். ஆனால், போட்டோக்களை கேமராவில் எடுத்ததால் அப்படியே அனுப்ப இயலாது என்றும், கணினியில் பதிவிறக்கம் செய்து பின்னரே அனுப்ப இயலும் என்று கூறியுள்ளனர். ஆனால், அந்த கும்பல் தங்களது புகைப்படங்களை உடனே அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு உடனே அனுப்ப முடியாது என்று சூர்யாவும், அவரது நண்பர்களும் எடுத்துக் கூறியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அப்போது அந்த கும்பலில் திலீப் என்ற நபர் இருந்தார். அவர் சட்டென்று தான் வைத்திருந்த கூர்மையான கத்தியால் யாரும் எதிர்பாராத விதமாக சூர்யாவை நெஞ்சிலே குத்தினார். கத்திக்குத்துக்கு ஆளான சூர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனால், அவரது நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தப்பியோட்டம்:
சூர்யாவை கத்தியால் குத்திய திலீப் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலமாக சூர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சூர்யாவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் நண்பர்கள் அளித்த வாக்குமூலம் மூலமாக தப்பிச் சென்ற 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி தினத்தில் புகைப்படங்களை பரிமாறும் விவகாரத்தில் இளைஞரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: வானத்தில் வண்ண வண்ண கலர்கள் - கரூரில் அனைத்து மதத்தினரும் தீபாவளி உற்சாக கொண்டாட்டம்
மேலும் படிக்க: சேலம் டூ சென்னை இண்டிகோ விமானத்தின் கட்டணம் பல மடங்கு உயர்வு - பயணிகள் பாதிப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)