சேலம் டூ சென்னை இண்டிகோ விமானத்தின் கட்டணம் பல மடங்கு உயர்வு - பயணிகள் பாதிப்பு
சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூர், கொச்சின், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பணிக்கு திரும்பும் பயணிகள் கட்டண உயர்வினால் கடுமையாக பாதிப்பு.
சேலம் மாவட்டம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இன்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இருமார்க்கத்திலும் இயங்கும் இந்த விமானத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தினமும் இந்த விமானத்தில் அதிகப்படியான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து சேலத்திற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது.
தீபாவளி பண்டிகை என்பதால் உள்நாட்டிற்குள் இயங்கும் விமானங்களின் கட்டணம் நேற்று முன்தினம் உச்சம் தொட்டது. டெல்லி, மும்பை, ஐதராபாத், சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட விமானங்களின் கட்டணம் 6 மடங்கு அளவிற்கு அதிகரித்தது. இதில், சென்னையில் இருந்து சேலத்திற்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தின் கட்டணம் 5 மடங்கு அதிகரித்தது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்த பயணிகள், ரூபாய். 11,504 கட்டணம் செலுத்தி வந்தடைந்தனர். வழக்கமாக சென்னை-சேலம் பயணத்திற்கு ரூபாய் 2,390 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வந்த பயணிகள் இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ள நிலையில் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் கட்டணம் ரூபாய் 11,300 க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நேற்று முன்தினம் சென்னை-சேலம் விமானத்தின் கட்டணம் 3 மடங்கு அளவிற்கு அதிகரித்திருந்தது. சேலத்தில் இருந்து சென்னை செல்ல வழக்கமான கட்டணத்தை விட ரூபாய் 2,000 வரை அதிகரிக்கப்பட்டிருந்தது. நேற்று (12ம் தேதி) சென்னை-சேலம் பயணத்திற்கு ரூபாய் 4,451 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இக்கட்டணம் படிப்படியாக உயரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதான் திட்டத்தின் கீழ் சேலம்- சென்னை விமான சேவை தற்போது வழங்கப்படவில்லை. அதனால், டைனமிக் கட்டண நிர்ணய முறை பின்பற்றப்படுகிறது. அதேவேளையில் சேலத்தில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஐதராபாத்திற்கு இயக்கப்படும் கட்டணம் குறிப்பிட்ட அளவு மட்டுமே உயர்த்தப்பட்டிருந்தது. இதனால் சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூர், கொச்சின், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பணிக்கு திரும்பும் பயணிகள் கட்டண உயர்வினால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.