கள்ளக்குறிச்சி: விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..
கள்ளக்குறிச்சியில் உருவக்கேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன், சக நண்பனை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உருவகேலி செய்ததால் ஆத்திரம் அடைந்த மாணவன் சக நண்பனை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்சி பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவன் கோகுல்ராஜ்.இவர் கடந்த 15-ஆம் தேதி இரவு தனது நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், அன்று இரவு மகன் வீடு திரும்பாததால் அவருடைய செல்ஃபோனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
அது மட்டுமின்றி மாணவனின் நண்பர்கள் பலரிடமும் கோகுல்ராஜ் குறித்து விசாரித்துள்ளனர். இருப்பினும் கோகுல்ராஜ் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால் அச்சம் அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதே நேரம் அன்று இரவு, திருக்கோவிலூர் புறவழிச்சாலை அருகே கோகுல்ராஜ் படித்து வந்த பள்ளியின் பின்புறம் அரிவாளால் வெட்டப்பட்டு உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு அது கோகுல்ராஜ்தான் என அடையாளம் கண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் கோகுல்ராஜூடன் பயின்ற சக மாணவர் ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த மாணவர் கோகுல்ராஜ் தன்னை தொடர்ந்து குண்டாக இருப்பதாக கூறி உடல் கேலி செய்ததாகவும், பலமுறை எச்சரித்தும் கோகுல்ராஜ் தன்னை தொடர்ந்து கிண்டல் செய்ததாகவும் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக சேர்த்துவைத்த ஆத்திரத்தால் கோகுல்ராஜை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறிய மாணவன் பள்ளிக்கு பின்புறம் வைத்து உணவு உட்கொண்டுவிட்டு ஓய்வெடுத்த கோகுல்ராஜை அரிவாளால் பின்புறம் இருந்து வெட்டியதாகவும், ஆத்திரம் தீர கத்தியால் கோகுல்ராஜின் உடலை கீறியதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து மாணவரை கொலை குற்ற வழக்கில் கைது செய்த போலீஸார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கி பள்ளியில் சேர்த்துள்ளனர். உருவக்கேலி செய்ததால் நண்பனை நண்பனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read:பழனி கோவிலில் அறநிலையத்துறை பணிகள்..விண்ணப்பிப்பவர்கள் கவனத்துக்கு..
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்