Cough Syrup: விஷமான காஞ்சிபுரம் இருமல் மருந்து - 16 குழந்தைகள் பலி, தவறான ரசாயனங்கள், 350 விதிமீறல்கள்
Cough Syrup: 14 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து தயாரிக்கப்பட்ட காஞ்சிபுரம் தொழிற்சாலையில், சுமார் 350 விதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Cough Syrup: 14 குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து தயாரிப்பில் சட்டவிரோத ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
16 குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் மருந்து
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்தியபிரதேசத்தில் 14 மற்றும் ராஜஸ்தானில் 2 என மொத்தம் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. தேசிய அளவில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. இதையடுத்து ஆலையின் செயல்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு, 26 பக்கங்களை கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், ஸ்ரேசன் நிறுவனம் கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதோடு, சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டுகொள்ளப்படாத விதிகள், தரமற்ற ரசாயனங்கள்:
தமிழ்நாடு அரசின் அறிக்கையை அணுகியதாக குறிப்பிட்டு, இந்தியா டுடே நிறுவனம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில், மருந்து உற்பத்தி செயல்பாட்டில் 350க்கும் மேற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த விதி மீறல்களை முக்கியமானவை மற்றும் பெரியவை என அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். நிறுவனத்தில் அடிப்படை வசதிகள், தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் தயாரிப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சரியான நடைமுறைகள் இல்லை” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரமற்ற தொழிற்சாலை வளாகம்:
அறிக்கையின்படி, ”குறிப்பிட்ட இருமல் மருந்தானது தொழிற்சாலை வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காற்றை கையாள்வதற்கான வசதிகள் இல்லை. மோசமான வெண்டிலேஷன், பாதிக்கப்பட்ட அல்லது துருப்பிடித்த உபகரணங்கள் இருந்துள்ளன. ஆலை அமைப்பு மற்றும் வடிவமைப்பு ஆகியவை இயல்பாகவே மாசுபாட்டின் அபாயங்களுக்கு பங்களித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரத்தை உறுதி செய்வதற்கான துறை என்பதே இல்லை. வெளியே சந்தைக்கு அனுப்ப தயாராகும் மருந்து யூனிட்களை கண்காணிப்பதற்கான அதிகாரி என யாருமே நியமிக்கப்படவில்லை. மருதுகளை திரும்பப் பெறுவது அல்லது தரத்தில் ஏற்பட்ட தவறுகளை கையாள்வதற்கு என நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என எதுவுமே இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். சுத்திகரிக்கப்பட்ட நீர் அமைப்பு, பூச்சி கட்டுப்பாடு அல்லது சுத்தம் செய்யும் வழிமுறை என எதுவுமே இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோத ரசாயனங்களின் பயன்பாடு
மிகவும் ஆபத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக, அந்த நிறுவனம் 50 கிலோகிராம் புரோப்பிலீன் கிளைகோலை உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக வாங்கியது தெரிய வந்துள்ளது. மருந்தில் , வண்ணப்பூச்சுகள் மற்றும் பிளாஸ்டிக்குகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் மிகவும் நச்சுத்தன்மையுள்ள தொழில்துறை கரைப்பானான டைஎதிலீன் கிளைகோலின் (DEG) தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
வேதியல் கலவைகளை மாற்றுவதற்கு நிறுவனம் பிளாஸ்டிக் குழாய்களை பயன்படுத்தியதாகவும், வடிகட்டுவதற்கான அமைப்பு இல்லாததாகவும், ரசாயனக் கழிவுகளை நேரடியாக பொது வடிகால்களில் செலுத்தியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். முக்கியமான உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தொட்டிகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியிலேயே பல குளறுபடிகள்:
மூலப்பொருட்கள் சோதனை அல்லது விற்பனையாளர் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டதையும், பாதகமான எதிர்வினைகளைக் கண்காணிக்க எந்த மருந்தக கண்காணிப்பு அமைப்பும் ஆலையில் இல்லை என்பதையும் ஆய்வுக் குழு கண்டறிந்தது. திறந்தவெளி சூழல்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டதால் மாசுபடுவது தவிர்க்க முடியாததாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூச்சிகள் போன்றவை ஆலைக்குள் நுழைவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஈ-க்களை தடுக்கவும் காற்று திரைச்சீலைகள் இல்லை. உற்பத்திப் பகுதிகள் வடிகட்டப்பட்ட காற்றால் காற்றோட்டமாக இல்லை என எண்ணற்ற குற்றச்சாட்டுகள் நிறுவனத்தின் மீது தமிழ்நாடு அரசால் அடுக்கப்பட்டுள்ளன.
உற்பத்தி நிறுத்தம்:
ஆய்வை தொடர்ந்து ஸ்ரேசன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் மருந்துகளுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் உள்ள மருந்துகளை திரும்பப் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமையாளர் தரப்பிலிருந்து விளக்கம் கேட்டுள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரையில் உற்பத்தியை நிறுத்தவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களும் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனைக்கு தடை விதித்துள்ளன. அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை நிறுவனம் பின்பற்றி இருந்தால் கூட, அந்த 16 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் என தமிழ்நாடு அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.





















