இஸ்லாமிய பெண்ணை காதலித்த தலித் இளைஞர்: தலையில் கல்லை போட்டு இருவரையும் கொன்ற தந்தை!
கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்த இஸ்லாமிய பெண்ணின் தந்தை உள்பட குடும்பத்தினர் காதலர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயவாடாவை மாவட்டத்தில் உள்ளது சலடஹில் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் மடிவலபா படிகர். 18 வயதான படிகர் அதே கிராமத்தைச் சேர்ந்த டவால்பி பந்தகிசாப் என்ற 18வயது இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். பந்தகிசாப்பும் பசவராஜை விரும்பியுள்ளார்.
இந்த நிலையில், இருவரின் காதல் விவகாரமும் டவால்பி பந்தகிசாப்பின் குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. பசவராஜ் தலித் என்பதாலும், வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் பந்தகிசாப்பின் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பசவராஜிடம் தனது பெண்ணை காதலிப்பதை கைவிட்டுவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், பசவராஜூம், பந்தகிசாப்பும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது வீட்டிற்கு தெரியாமல் வெளியே சந்தித்தும் வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காதலர்களாக பசவராஜூம், டவால்பி பந்தகிசாப்பும் வயல்வெளியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பந்தகிசாப்பின் உறவினர்கள், பந்தகிசாப்பின் தந்தையிடம் இந்த விவகாரத்தை கூறியுள்ளனர்.
இதனால் கடுமையாக ஆத்திரம் அடைந்த பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் வயல்வெளிக்கு விரைந்து வந்துள்ளனர். கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த அவர்கள் வந்தபோது, வயல்வெளியில் பந்தகிசாப்பும், பசவராஜூம் பேசிக்கொண்டிருந்ததை கண்டு மேலும் கோபம் அடைந்தனர். இதனால், ஆத்திரத்தில் பசவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், பந்தகிசாப்பையும் அடித்து உதைத்துள்ளனர்.
பின்னர், காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டி அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதையறிந்த பசவராஜூன் தாயார் உடனடியாக சம்பவ இடத்திற்கு பதறியடித்து சென்றுள்ளார். அங்கு, பந்தகிசாப்பின் தந்தையிடமும், சகோதரர்களிடமும் தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்.
ஆனால், பசவராஜூன் தாய் கதறியதை சிறிதும் பொருட்படுத்தாமல் பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் பசவராஜ் மற்றும் பந்தகிசாப் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். கத்தியால் குத்தியும் ஆத்திரம் அடங்காத அவர்கள், காதலர்கள் இருவரது தலையிலும் கல்லைப் போட்டு பசவராஜ் தாயின் கண் முன்னே கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
கொலை செய்த பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பசவராஜ் மற்றும் பந்தகிசாப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளான பந்தகிசாப்பின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் என 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.