பதுக்கப்பட்ட பாக்கெட் சாராயம்; பறிமுதல் செய்த கிராம மக்கள்!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து பாக்கெட் போட்டு விற்பனையில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர்.
சீர்காழி அருகே கீழக்கரையில் பதுக்கிவைத்து சாராய விற்பனையில் ஈடுபட்டவரை 100 லிட்டர் சாராயத்துடன் பிடித்து காவல்துறையினரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனர். கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு பிறப்பித்தது, மருந்தகங்கள், உணவகங்கள், பால் கடைகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கடைகளும் திறக்கக்கூடாது என அனுமதி மறுத்துள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மார்க் கடை இயங்கவும் தடை விதித்துள்ளது. இதனால் மது பிரியர்கள் கடந்த சில வாரங்களாக மது அருந்தாமல் அதுக்காக ஏங்கி தவிக்கும் சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக மதுவிற்கு அடிமையானவர்கள் பலர் எவ்வாறாவது தங்களை மதுபோதையில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மதுபான கடைகளின் சுவர்களில் ஓட்டை போட்டு மது பாட்டில்களை திருடுவதும், கள்ளச்சாராயத்தையும் நாடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் தற்போது பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனையில் ஈடுபடுவதுமாய் உள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழக்கரை கிராமத்தில் முருகேஸ்வரி என்ற பெண் சாராய வியாபாரியும் அவரது உறவினரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை பலமுறை கிராமமக்கள் எச்சரித்தும் அதனை கண்டு கொள்ளாமல் சாராய விற்பனையை தொடர்ந்துள்ளார். தற்போதைய கொரோனா தொற்று ஊரடங்கிலும் தடையை மீறி சாராயம் விற்பனை செய்ததுடன் பல பகுதிகளுக்கும் மொத்த வியாபாரமும் செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து இங்கு பாக்கெட் போட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சாராயம் விற்பனை செய்யும் இடத்தை முற்றுகையிட்டு அங்கு பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி சாராயத்தை கைப்பற்றினர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த திருவெண்காடு காவல்நிலைய காவல்துறையினர் சாராயம் விற்பனை செய்த கலைச்செல்வன் என்பவரை பிடித்து, வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பெண் சாராய வியாபாரி முருகேஸ்வரியை தேடி வருகின்றனர்.
மேலும் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத அளவாக 820 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இது போன்று ஊரடங்கு காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாராய விற்பனையில் ஈடுபட்டும் நபர்களால் தான் தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டும் நபர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள நிலையிலும் இதுபோன்ற செயல்கள் தொடர்வது காவல்துறையில் உள்ள குறைபாட்டை காட்டுவதாகவும், இதனை சரி செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.