சிறையில் ராஜேந்திர பாலாஜிக்கு வழங்கப்படும் உணவு இதுதான்...!
திருச்சி மத்திய சிறையில் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் இருந்த அறையில் தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3.10 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 5-ந் தேதி கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார். விருதுநகருக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராஜேந்திர பாலாஜி நீதிபதியிடம் சிறையில் தனக்கு ஏ கிளாஸ் சிறை வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, திருச்சி மத்திய சிறையில் உள்ள உயர்பாதுகாப்பு கொண்ட தொகுதி எண் 2ல் அறை எண் 4ல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்த அறையில் இதற்கு முன்னதாக, தமிழ்நாட்டையே மிகவும் பரபரப்புக்குள்ளாக்கிய சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, அவர் பாதுகாப்பு காரணமாக வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராஜேந்திர பாலாஜிக்கு சிறையில் பிற கைதிகளுக்கு வழங்கப்படும் காலை உணவான தயிர்சாதம், புளிசாதம் காலையில் வழங்கப்பட்டது. மதியம் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது பல்வேறு சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பில் சிக்கிக் கொண்டிருந்தார் ராஜேந்திர பாலாஜி. மோசடி வழக்கில் அவரை கைது செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக பாதுகாப்பு கெடுபிடிகள் இறுக்கப்பட்டது. கர்நாடகா, கேரளாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட ராஜேந்திரபாலாஜியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். கடைசியில் 19 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கர்நாடக மாநிலம் ஹாசனில் ராஜேந்திர பாலாஜி போலீசாரிடம் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கைது செய்து விருதுநகர் அழைத்து வந்தபோது, அவரின் ஆதரவாளர்கள் பலரும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை சிறையில் அடைக்கவிடாமல் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க : பள்ளி சீருடையுடன் புஷ்பா படம் பார்த்த மாணவர்கள் - அறிவுரை கூறி அனுப்பி வைத்த வட்டாட்சியர்
மேலும் படிக்க : அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட 7 மடங்கு கொரோனா இறப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்