அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட 7 மடங்கு கொரோனா இறப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமான கொரோனா இறப்புகள் ஏற்பட்டுள்ளாதாக ஐ.ஐ.டி. அகமதாபாத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் 2021 இரண்டாவது அலை தணிந்தபோது ஒட்டுமொத்த கோவிட் -19 இறப்புகள் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமாக இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஐ.ஐ.டி. அகமதாபாத் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
இந்த குழு 1.4 லட்சம் நபர்களிடம் கணக்கெடுப்பு மேற்கொண்டு அரசாங்க தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வுக்கு நடத்தியது. அதில் 2020 மற்றும் 2021 கொரோனா அலைகளின் போது கொரோனாவால் இறந்தவர்களையும், மேலும் பல காரணங்களால் ஏற்பட்ட இறப்புகளுடன் இணைத்தனர்..
இந்நிலையில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்தியாவின் கோவிட் இறப்பு எண்ணிக்கை 31 லட்சம் முதல் 34 லட்சம் வரை இருப்பதாகவும், அதில் 26 லட்சம் முதல் 29 லட்சம் இறப்புகள் ஏப்ரல் மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களளாக கொரோனா பணிந்து வந்து கொண்டிருந்த வேலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நாட்டில் இன்று புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகம். (இதில் மஹாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 36 ஆயிரத்து 265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்). இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 52 லட்சத்து 26 ஆயிரத்து 386 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 3,007 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 876 பேருக்கும், டெல்லியில், 465 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 333 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 291 பேருக்கும், கேரள மாநிலத்தில், 284 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 204 பேருக்கும், தமிழகத்தில், 121 பேருக்கும், ஹரியானா மாநிலத்தில், 114 பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில், 107 பேருக்கும், ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 3,007 பேரில், 1,199 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.