ஓடும் ரயிலில் சிக்கிய கிலோ கணக்கில் கஞ்சா... சிக்காத கடத்தல்காரர்கள்...!
மயிலாடுதுறையில் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்களை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் - புவனேஸ்வர் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்களை மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடரும் போதைப் பொருள் கடத்தல்
வடஇந்தியாவில் இருந்து தமிழ்நாடிற்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க ரயில் காவல்துறையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் என பல்வேறு காவல் பிரிவுகளை சேர்ந்த காவலர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இந்த கடத்தலை தடுப்பது என்பது முடியாத காரியமாக இருந்து வருகிறது.
காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல்
இந்நிலையில் வடஇந்தியாவில் இருந்து மயிலாடுதுறை வரும் ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் உத்தரவின்படி, வடஇந்தியாவில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் வழியாக செல்லும் ரயில்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டு வந்தனர்.
ஓடும் ரயிலில் சோதனை
இந்த சூழலில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சுந்தரேசன் தலைமையில், ரயில்வே இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் மற்றும் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளர்கள் அன்னை அபிராமி (மயிலாடுதுறை). ஜெயா (சீர்காழி) மற்றும் காவல்துறையினர் இணைந்து புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற வாராந்திர ரயிலில் (வண்டி எண்: 20849) சீர்காழி முதல் மயிலாடுதுறை வரை கூட்டுச்சோதனையில் ஈடுப்பட்டனர்.
சிக்கிய கஞ்சா
அந்த சோதனையில் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் பயணிகள் பொருள்கள் வைக்கும் இடத்தில், யாரும் உரிமை கோரப்படாத நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பையை காவல்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் அந்த பையில் 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, அந்த பை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் புவனேஸ்வரில் இருந்து கஞ்சா, குட்கா பொருள்களை கடத்தி வந்ததும், காவல்துறையினரின் சோதனையை அறிந்த குற்றவாளிகள் இவற்றை ரயில் பெட்டியிலேயை விட்டு சென்றதும் தெரியவந்துள்ளது.
1000 பேர் கைது
இந்த மாதத்தில் மட்டும் இதற்கு முன்னர் இதேபோன்று வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டதில் 30 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சுந்தரேசன் பொறுப்பேற்று கடந்த ஆறு மாதங்களில் போதைப் பொருட்கள் தொடர்பான நடவடிக்கையில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






















